கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒருவர், மார்ச் 20, 2020 அன்று, மனைவியை கொலை செய்வது எப்படி? என கூகுள் சர்ச் (Google search) செய்துள்ளார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, இசை ஆசிரியர் பிரசாந்த் நம்பியார், அப்போது அவருக்கு வயது 33, தனது வாடகை வீட்டில் தோழி சுசித்ரா பிள்ளையை (42) கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஒரு பெட்ஷீட்டில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.
அன்றிரவு, பிரசாந்த் மீண்டும் Google search செய்து, உடலை டிஸ்போஸ் செய்வது எப்படி என்று தேடியுள்ளார். மேலும் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் ஏமாற்றும் சதித்திட்டம் குறித்த திரைப்படங்கள் பார்த்துள்ளார். அதோடு சுசித்ராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறமுள்ள குழியில் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்லம் மாவட்டம் நடுவிலக்கார கிராமத்தைச் சேர்ந்த சுசித்ராவை கொலை செய்த வழக்கில் பிரசாந்த்துக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1 கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அதோடு பிரசாந்த் மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கருப்பு உடை
2019 இல் தொடங்கிய உறவின் உச்சகட்டமாக இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் கூற்றுப்படி, சுசித்ரா, 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் ஏற்கனவே திருமணமான பிரசாந்துடன் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பியுள்ளார். அழகுக்கலை பயிற்சியாளரான சுசித்ரா, பிரசாந்த் மனைவியின் தூரத்து உறவினர் ஆவார்.
இருவரும் முதன்முதலில் 2019-ம் ஆண்டு பிரசாந்த் குழந்தை பெயர் சூட்டும் விழாவில் சந்தித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பேசி நட்பாக பழகி வந்துள்ளார். பிரசாந்த் ஆரம்பத்தில் அவரை மூத்த சகோதரியாகக் கருதி “சேச்சி” என்று அழைத்து வந்துள்ளார். பாலக்காட்டில் ஒரு தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பிரசாந்த் பணியாற்றி வந்துள்ளார். பிரசாந்தின் குடும்ப விழாக்களில் சுசித்ரா கலந்து கொள்வார்.
இந்நிலையில், இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், சுசித்ரா மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் தாயாக வேண்டும் என்று விரும்பியுள்ளாள். பிரசாந்திடம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சுசித்ராவிடமிருந்து பிரசாந்த் ரூ.2.56 லட்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சுசித்ராவிடம் குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தால், இவர்களின் உறவு குறித்த விவகாரம் குடும்பத்தாருக்கு தெரிந்துவிடும் என பிரசாந்த் பயந்தார். இதனால் சுசித்ராவை கொலை செய்ய முடிவு செய்த அவர், பாலக்காட்டில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அவரை அழைத்துள்ளார். குற்றப்பத்திரிகையின்படி 2020, மார்ச் மாதம் பிரசாந்த் சுசித்ராவை வீட்டிற்கு அழைத்துள்ளார். 2 நாட்கள் தங்கும்படி கூறியுள்ளார். இதற்கிடையில், பிரசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தையை கொல்லத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பெற்றோரை கோழிக்கோடுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கொடூர கொலை
மேலும், சுசித்ராவை கருப்பு உடை அணிந்து வருமாறு பிரசாந்த் அவரிடம் வாட்ஸ்அப்பில் கூறியுள்ளார். அப்போது தான் இரவில் வீட்டிற்குள் நுழையும் போது யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார்.
போலீஸ் பதிவுகளின்படி, சுசித்ரா மார்ச் 17 காலை வீட்டை விட்டு வெளியேறி கொல்லத்தில் உள்ள அழகுக்கலை பயிற்சி அகாடமிக்குச் சென்றார். ஒரு வகுப்பில் உரையாற்றுவதற்காக கொச்சிக்கு செல்வதாக அவர் தனது குடும்பத்தினரிடம் கூறினார். மேலும், அன்று மதியம், உடல்நிலை சரியில்லை எனக் கூறி உறவினரைச் சந்திக்க ஆலப்புழா செல்வதாகக் கூறி அகாடமியை விட்டு வெளியேறியுள்ளார்.

அன்று மாலை, கொல்லத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், யாருக்கும் தெரியாமல் பிரசாந்த் அவளை காரில் அழைத்துக்கொண்டு 270-கிமீ தொலைவில் உள்ள பாலக்காடுக்கு சென்றுள்ளார். மார்ச் 20 வரை அவர்கள் இருவரும் பிரசாந்தின் வீட்டில் தங்கியுள்ளனர். சுசித்ரா கொல்லத்தில் தான் வேலை பார்க்கும் கடையில் கூடுதல் விடுப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மார்ச் 22 ஆம் தேதி தான் திரும்பி வருவேன் என்று தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, மார்ச் 20 அன்று மாலை சுசித்ராவை பிரசாந்த் கொலை செய்தார். அன்று மாலை முதலில் சுசித்ராவின் தலையை தரையில் மோதி பிரசாந்த் தாக்கியுள்ளார். அவள் தரையில் விழுந்ததும், பிரசாந்த் அவள் மீது அமர்ந்து அவள் மார்பில் அழுத்தி இரண்டு முழங்கால்களையும் உடைத்துள்ளார். எமர்ஜென்சி விளக்கில் இருந்து பிரித்து வைத்திருந்த மின்சார கம்பியை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை பெட்ஷீட்டில் மறைத்துள்ளார்.
சதித்திட்டம்
விசாரணை அதிகாரிகளை தவறாக வழிநடத்த, பிரசாந்த் திருச்சூரில் உள்ள மண்ணுத்தியில் உள்ள காவல் நிலையம் அருகே போனை சுவிட்ச் ஆன் செய்தார். அவள் அந்த இடத்தில் இருப்பதைக் காட்ட, அவள் போனை சிறிது நேரம் ஆன் செய்து வைத்திருந்தான். பின்னர், போன் மற்றும் சிம்மை சேதப்படுத்திவிட்டு, பாலக்காடு திரும்புவதற்கு முன், மண்ணுத்தியில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள நடதாரா என்ற இடத்தில் போன், சிம்மை தூக்கி எறிந்து சென்றார்.
வீட்டிற்கு வந்த பிரசாந்த், சுசித்ரா அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றினார். மேலும் சுசித்ராவின் கால்கள் வெட்டி வீட்டின் பின்னால் ஒரு குழி தோண்டி, அங்கு அவர் உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தினார். உடல் உறுப்புகளில் பெட்ரோலை ஊற்றி எரித்தார். நாய்கள் உடலைத் தோண்டி எடுக்க முடியாதபடி கற்கள் மற்றும் சிமென்ட் கற்களால் குழியை மூடினார். அவளுடைய ஆடையையும் மற்ற இரத்தக்கறை படிந்த பொருட்களையும் அவன் எரித்தான். உடலை வெட்டப் பயன்படுத்திய கத்தி மற்றும் பிற ஆயுதங்கள், குழி தோண்டப் பயன்படுத்திய மண்வெட்டி ஆகியவை வேறு இடங்களில் வைத்தான்.
மறுபுறம் சுசித்ராவின் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சுசித்ரா வேலை செய்த பியூட்டிஷியன் அகாடமியில் கேட்ட போது அவர் பொய் சொன்னது தெரியவந்தது. இதையடுத்து மார்ச் 23 அன்று, குடும்பத்தினர் உள்ளூர் போலீசில் சுசித்ராவை காணவில்லை என்று புகார் அளித்தனர். பின்னர் விசாரணையில் பிரசாந்தின் கால் ஹிஸ்டரியை வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக பிரசாந்த் கூகுள் பதிவு, வாட்ஸ்அப் பதிவு என அனைத்தும் டெலிட் செய்து வைத்தார்.
சிக்கிய ஆதாரம்
விசாரணை அதிகாரி பி. கோபகுமார் கூறுகையில், பிரசாந்தின் கால் ஹிஸ்டரி முதல் இன்டர்நெட் விவர பதிவுகள் வரை அனைத்தும் மீட்டனர். இது வழக்கின் திருப்புமுனையாக இருந்தது என்று கூறினார்.
மேலும், How the (spiritual guru) killed his wife என்று கூகுள் தேடலே வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. கொலைக்குப் பிறகும், அவர் மீண்டும் ஆன்லைனில் நுழைந்தார். அவளை கொன்ற பிறகு உடலை துண்டு துண்டாக வெட்ட முடிவு செய்தார். உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று இணையத்தில் தேடினார், கதாநாயகர்கள் காவல்துறையை ஏமாற்றும் திரைப்படங்களைத் தேடியுள்ளார்” என்று கூறினார்.
மேலும் சிறப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால், சூழ்நிலை ஆதாரங்களையே தேட வேண்டி இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த 18 சூழ்நிலை ஆதாரங்களை நாங்கள் முன் வைத்தோம். இது தவிர, சைபர் ஆதாரங்களும் வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்புக்கு உதவியது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“