கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு அவரது நெருங்கிய உறவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும் அவர் சாடியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் ஆவார்.
இந்நிலையில், கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு, இவரது நெருங்கிய உறவினரும், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனுமான ஸ்ரீகிருஷ்ண குல்கர்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோபாலகிருஷ்ண காந்தியின் தேர்வு தனக்கு அதிர்ச்சியளித்தது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை கடுமையாக சாடியுள்ள அவர், தற்போதைய காங்கிரஸ் தலைவர் கடந்த 1998-ஆம் ஆண்டில் இருந்து 18 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். அவருக்கு பின்னர், நேரு குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையான அவரது மகன் ராகுல் அடுத்ததாக வரவுள்ளார். மோதிலால் நேருவில் இருந்து இது தொடர்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பல்வேறு கிராமங்களுக்கு சென்றுள்ளேன். மக்கள் அனைவரும், நாட்டின் மீது பெருமை கொண்டுள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்து வருகின்றனர். அது வாரிசு அரசியல் காரணமாக தான் என்பதும் துல்லியமாக தெரிகிறது என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோபாலகிருஷ்ணனின் முடிவுக்கு எதிராக போராட வேண்டியது எனது கடமை என தெரிவித்துள்ள குல்கர்னி, காந்தியின் மிகப்பெரிய குடும்பத்தில், ஒரு சிறிய உறுப்பினராக எனது போராட்டத்தை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.