கோரக்பூர் சோகம்: பலி எண்ணிக்கை 72 ஆனது; 7 எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம்

ஆக்சிஜன் விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியுள்ள அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகளின் உயிரிழப்பு 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிராண வாயு (ஆக்சிஜன்) விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியுள்ள அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று (நேற்று) 11 குழந்தைகளும், 13-ம் தேதி (இன்று) ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆளும் பாஜக பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில அரசு, இதுகுறித்து நீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி ஆக்சிஜன் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் அது சரி செய்யப்பட்டு விட்டது என தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்த நாத் சிங், சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியுள்ள அதிர்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலண்டர் விநியோகித்து வரும் புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் ஏழு முறை, நிலுவைத் தொகை கோரியும், இல்லையெனில் சப்ளை நிறுத்தப்படும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கை விடுத்தும் கடிதங்கள் அனுப்பியுள்ளது. மேலும், நிலுவைத் தொகை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதியன்று சட்டப்பூர்வமாக நோட்டீஸும் அனுப்பியுள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அந்த எச்சரிக்கைகளில் அலட்சியம் காட்டியதுடன், நிலுவைத் தொகையையும் தராமல் இருந்துள்ளது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் கடந்த 4-ம் தேதி வரை அந்நிறுவனம் ஆக்சிஜன் விநியோகம் செய்து வந்துள்ளது.

இந்த தகவலை தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் கோரக்பூர் விற்பனை மேலாளர் தீபன்கர் ஷர்மா மேலும் கூறியதாவது: ஆக்சிஜன் விநியோகத்திற்காக, 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும். நிலுவைத் தொகை ரூ.10 லட்சத்தை தாண்ட கூடாது என ஒப்பந்தம் உள்ளது. ஆனால், கடந்த 2016-ஆண்டு நவம்பர் மாதம் முதல் மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் செலுத்த வில்லை. மூன்று மாதங்களுக்கு பின்னர், நடப்பாண்டு பிப்ரவரி மாதம், நிலுவைத் தொகை கோரி முதல் கடிதத்தை அனுப்பினோம். அப்போது நிலுவைத் தொகை ரூ.42 லட்சமாக இருந்தது. அதன்பின்னர், ஏப்ரல் மாதம் ஒரு கடிதம், மே மாதம் ஒரு கடிதம், ஜூன் மாதம் ஒரு கடிதம், ஜூலையில் இரண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு என தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளோம். இதையடுத்து, மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறு தொகையை மட்டும் மருத்துவமனை நிர்வாகம் அளித்தது.

நிலுவை தொகை ரூ.60 லட்சமாக இருந்த போதும், மனிதாபிமான அடிப்படையில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆக்சிஜன் விநியோகம் செய்து வந்தோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் எங்கள் நிறுவனத்தால் அதற்கு மேல் நிதி இல்லாமல் தாக்கு பிடிக்க இயலவில்லை என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் குழந்தைகள் உயிரிழப்பு வெளிச்சத்துக்கு வந்ததும், மருத்துவமனை நிர்வாகம் ரூ.20 லட்சத்தை செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, நிலுவைத் தொகை ரூ.40 லட்சமாக உள்ளது என புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தை சீர் செய்ய மேலும் ஓர் நாளாகும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தவில்லை என்றால் எங்களால் விநியோகத்தை தொடர முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், கடந்த ஜூலை 18-ம் தேதியன்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அம்மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நிலுவை தொகை செலுத்தி ஆறு மாதமாகிறது. மேற்கொண்டு தாமதப்படுத்தினால், அதற்கு மருத்துவமனையே முழுப் பொறுப்பு எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close