உத்தரபிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ‘பற்றாக்குறையால்’ மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள் 5 நாட்களில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இறந்த ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தைகளுக்குப் பின்னாலும் சொல்லப்படாத கதைகள் உள்ளன. அது அவர்களுக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். ஒரு குழந்தை அந்த குடும்பத்திற்கே மகிழ்ச்சியை அளித்திருக்கும். ஒரு குழந்தை சோகமயமான வீட்டிற்குள் கொண்டாட்டமான ஒன்றாக நுழைந்திருக்கும்.
அப்படி கோரக்பூர் பகாகதா கிராமத்தை சேர்ந்த பிரம்மதேவ் - சுமன் தம்பதியருக்கு எட்டு வருடங்கள் தவமிருந்து இரட்டை ஆண் குழந்தைகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கான எதிர்கால வாழ்வு குறித்து அவர்களின் பெற்றோர் கனவு கண்டு கொண்டிருந்தனர். எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. பிறந்து எட்டு நாட்களில் இரட்டை குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தது. உடனேயே பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு என்சஃபாலிட்டிஸ் நோய் தாக்கம் இருந்தது அங்கு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த குழந்தைகளை உயிருடன் யாரும் பார்க்கவில்லை.
ஆம். ஆக்ஸிஜன் ‘குறைபாட்டால்’ அந்த மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சுக் குழந்தைகளில் அந்த இரட்டைக் குழந்தைகளும் அடக்கம்.
“பிறக்கும்போது குழந்தைகள் இருவரும் நன்றாகத்தான் இருந்தனர். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அதற்குப் பிறகு குழந்தைகளை நாங்கள் யாரும் உயிருடன் பார்க்கவில்லை.”, என குழந்தைகளின் பாட்டி அனரா தேவி கவலை தோய்ந்த முகத்துடன் கூறுகிறார்.
அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு என்சஃபாலிட்டிஸ் நோய்த்தாக்கம் இருந்ததை மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என அனரா தேவி குற்றம்சாட்டுகிறார்.
”ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை அழைத்து செல்ல காத்திருந்தோம். ஆனால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாக முதலில் தெரிவித்தனர். ஆக்ஸிஜன் கொடுப்பதை நிறுத்தியபின் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள். அதனால், என்ன நடந்தது என்பதைக் கூட எங்களிடம் யாரும் சொல்லவில்லை.”, என அனரா தேவி தெரிவித்தார்.
குழந்தைகள் வீடு திரும்பியவுடன் மற்றவர்களுக்கு வழங்குவதற்காக குடும்பத்தினர் இனிப்புகள் வாங்கி வைத்திருந்ததாகவும் அனரா தேவி கூறினார். ஆனால், அந்தக் குழந்தைகள் உயிருடன் வீடு திரும்பவில்லை.
“குழந்தைகள் வீடு திரும்பியவுடன் அவர்களுக்கு பெயர் வைக்கலாம் என எண்ணியிருந்தோம்”, என குழந்தைகளுடனான எஞ்சிய நினைவுகளை சுமந்துகொண்டு செல்கிறார் அனரா தேவி.
இன்னும் அந்த குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் கூட கிடைக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.