உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றார். அதற்கு முன்னர் இவர் கோரக்பூர் மக்களவை தொகுதியின் எம்.பி.,-யாக பதவி வகித்து வந்தார். கோரக்பூர் மக்களவை தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற அவர், முதல்வரானதும், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து, சுமார் நான்கு மாதங்கள் கழித்து கடந்த 5-ம் தேதியன்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்து விட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு பிராண வாயு (ஆக்ஸிஜன்) நிறுத்தப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என கூறியுள்ள உத்தரப்பிரதேச மாநில அரசு, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், மத்திய சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் எனவும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சோக சம்பவத்துக்கு பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பு என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கடமையில் இருந்து தவறக் கூடாது. மாநில மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் கண்டிப்பான விசாரணை தேவை என தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி ஆகிய எதிர்க்கட்சிகள் மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது. அவசரகதியில் எதிர்க்கட்சிகள் கருத்துகள் கூறி வருவதாக உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதை கைவிட வேண்டும் என அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பே, இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று தான் ராஜினாமா கடிதம் அளித்ததாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் உயிரிழப்பு குறித்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,"மூளையில் ஏற்படும் வீக்கம் மிகப்பெரிய சவாலான ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.