உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று செய்தி மூலமாக இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. மாநில நிர்வகத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் சென்றதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட மாஜிஸ்திரெட் ரவிந்திர குமாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், மாவட்ட மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை மாஜிஸ்திரெட் உறுதிபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவ கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 79 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் ஆக்ஸிஜன் தட்டுபாடே காரணம் குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.