ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டாலும், தகுதியான பயனாளிகளுக்கு
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு காலக்கெடு விதித்திருக்கிறது. இதுவரை நாட்டில் 82 சதவீதம் குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்காததால், ரேஷன் கடையில் மலிய விலையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்ட நிலையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினிக் கொடுமையால் உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வழங்க ஆதார் அட்டை கட்டாயமில்லை எனவும், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி உணவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுவர் தாஸ் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், தகுதியான பயனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்க அனுமதி மறுக்கக்கூடாது என, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
ரேஷன் கார்டை அதார் எண்ணுடன் இணைக்காவிட்டாலும், தகுதியான பயனாளர்களுக்கு ரேஷன் கடைகளில் உனவுப்பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் கார்டு, பதிவு எண் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்தாலும், உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், ஆதார் எண்ணை பெறாவிட்டாலும், ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்க மறுக்க கூடாது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயோமெட்ரிக் தகவல்களை உறுதிசெய்ய முடியாவிட்டாலும், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை சமர்ப்பித்தால், அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களின் பெயரை ரேஷன் கடைக்காரர் விலக்கு பட்டியல் தயார்செய்து அதில் சேர்க்க வேண்டும். இதனை, மாநில அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணை பெறாவிட்டாலும், தகுதியான பயனாளர்களின் பெயர்களை ரேஷன் கார்டு பதிவேட்டில் இருந்து நீக்கக்கூடாது. பயனாளி உண்மையானவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பெயரை நீக்க வேண்டும்.”, என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ஆம் தேதி வரை
காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.