11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கம்: உங்களது பான் கார்டுக்கு "உயிர்" இருப்பதை உறுதி செய்வது எப்படி?

நாடு முழுவதும் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பான் கார்டு செயலாக்கத்தில் உள்ளதா என எளிய முறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், உங்களது பான் கார்டு செயலாக்கம் பெற்றுள்ளதா என்பதை எளிய நடைமுறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண் ஆகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்

இந்நிலையில், சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பதை மீறி, ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின்படி, போலி பான் கார்டுகள் மொத்தம் 11 லட்சத்து 44,211 அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன என்றார்.

இதையடுத்து, பெரும்பாலானவர்களுக்கு தங்களது பான் கார்டு செயலிழக்கம் செய்யப்படுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது. இதனை தவிர்த்து உங்களது பான் கார்டு செயலாக்கம் பெற்றுள்ளதா என கண்டறிய கீழ்காணும் எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.

**உங்களது பான் எண் செயலாக்கம் பெற்றுள்ளதா என்பதை அறிய முதலில் //www.incometaxindiaefiling.gov.in இந்த இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். வலைதளத்தின் முகப்பு பக்கத்தில், உங்களது இடது கை பக்கமாக இருக்கும் சேவைகள் (services) வரிசையின் கீழ் உள்ள “நோ யுவர் பான்” (KNOW YOUR PAN) எனும் விருப்பத் தேர்வை கிளிக் செய்யவும்.

**அதை கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கத்துக்கு உங்களை அது எடுத்துச் செல்லும். அதில், கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். அதாவது, பெயர், பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை சமர்பிக்க (Submit – பட்டனை) கிளிக் செய்ய வேண்டும்.

**அப்படி செய்தால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச் சொல் வரும் (OTP Password). அந்த பாஸ்வேர்டை அதற்கு உண்டான இடத்தில் உள்ளீடு (ENTER) செய்யவும்.

**ஒருவேளை பல நிரந்தர கணக்கு எண்களை நீங்கள் பதிவு செய்திருந்தால், அதனை தெரிவிக்கும்படியான அறிவிப்பு உங்களுக்கு காட்டப்படும். தொடர்ந்து, கூடுதல் தகவல்களை கேட்கும்; அதாவது தந்தை பெயர் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள். அதனை பூர்த்தி செய்து முடித்ததும், உங்களை வேறு ஒரு வலைத்தளப் பக்கத்துக்கு அது எடுத்துச் செல்லும். அதில், “உங்களது பான் கார்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும். செயலாக்கத்தில் உள்ள உங்களது நிரந்தர கணக்கு அல்லது பான் எண்” உள்ளிட்ட தகவல்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

×Close
×Close