ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை முறை விரைவில் தொடங்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, மாதந்தோறும் 1 மற்றும் 16 தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் விலை நிர்ணயிப்பதில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் முக்கிய பங்கு வகித்தது.
ரூபாய் மதிப்பில் தினந்தோறும் மாற்றம் ஏற்படும். அதே போல கச்சா எண்ணெயின் மதிப்பும் நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்தால் வாடிக்கையாளர்களுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கருதி, விலையை மாற்ற மத்திய அரசிடம் அனுமதி கோரின. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.
இதனால், கடந்த ஜூன் 16-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயிக்கும் முறை நாட்டில் அமலுக்கு வந்தது. அதன்படி, தினமும் இதன் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறையின் மூலம் பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்ததாகக் கூறி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, அனைத்து துறைகளிலும் வணிகம் செய்யும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு நன்மை கிடைக்கிறது. அதேபோல் தொலைத்தொடர்புப் புரட்சியால் சரியான கொள்கைகளின் உதவியோடு இயங்கும் சுதந்திரமான சந்தைகள் நுகர்வோருக்கு எப்போதும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவுசெய்தால் வீடுகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதை தனது ட்விட்டரிலும் அவர் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீடு தேடி பெட்ரோல், டீசல் வரும். அதற்கான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.