29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி

29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவும், 53 சேவை பிரிவுகளுக்கான வரியை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் 25-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவும், 53 சேவை பிரிவுகளுக்கான வரியை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சில விவசாய பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து வேறுபட்ட கருத்துகள் இருப்பதாக தெரிவித்த அருண் ஜெட்லி, ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார்.

இ-வே பில் எனப்படும் இணைய வழி ரசீது பரிமாற்றம், வரும் 25-ஆம் தேதி வரை சோதனை முறையாக தொடரும் எனவும், 15 மாநிலங்கள் இந்த முறையை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி கணக்கை தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், படிவம் 3பி மூலமாக கணக்கு தாக்கல் செய்யும் முறை தொடரும் எனவும் ஜெட்லி கூறினார்.

மேலும், இந்த கூட்டத்தில் 60 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரியை ரியல் எஸ்டேட் வரம்புக்குள் கொண்டு வரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அலுமினிய பொருட்களின் வரியை 12 %ல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும் எனவும், விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close