கடும் விமர்சனங்கள் மத்தியில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நாடு முழுவதும் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இப்போதும் நமக்கு ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை பெறுவது எப்படி, அதன் மூலம் நாம் மேற்கொள்ளும் விற்பனை மற்றும் சேவைக்கு ஜி.எஸ்.டி செலுத்துவது எப்படி என்ற சந்தேகம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த பின் சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய கணக்கு வழக்குப் பணிகள் முன்பை விட அதிகரித்திருக்கின்றன. இதற்கான அனைத்து வேலைகளையும் ஆடிட்டர் மூலம் செய்ய முடியாது என்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் பி.காம் பட்டதாரிகளை பணிக்கு சேர்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஜி.எஸ்.டி சம்பந்தமாக பி.காம். படித்தவர்கள் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்?
- ஜி.எஸ்.டி. குறித்த அடிப்படை பணிகளை மேற்கொள்ளுதல். குறிப்பாக, நிறுவனத்திற்கான ஜி.எஸ்.டி பதிவு எண்ணை பெறுதல், நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவைக குறித்த விவரங்களை ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்டவை.
- ஒவ்வொரு பொருளுக்கும் விதிக்கப்பட்ட வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டி. வரியின்படி அதற்கான விவரங்களை முறையாக மென்பொருளில் பதிவேற்றுதல்.
- உரிய நேரத்தில் வரியை செலுத்துதல், கால தாமதமாகும் போது அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுதல்.
- அனைத்து நடைமுறைகளும் இணையத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், தொழில்நுட்ப ரீதியிலான பணிகளையும் செய்ய வேண்டும்.
- ஆடிட்டர்களுக்கு ஜி.எஸ்.டி வரியால் ஏற்படும் அதிகப்படியான வேலைகளை குறைத்தல்.
இத்தகைய பணிகளுக்காக, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பி.காம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கே முன்பெல்லாம் வேலைக்கு வந்த பி.காம் பட்டதாரிகள், தற்போது 20,000 வரை தொடக்க சம்பளமாக எதிர்பார்ப்பதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஜி.எஸ்.டி. குறித்த முழு அறிவும், வாசிப்பும் இருந்தால் ரூ.30,000 வரை தொடக்க சம்பளமாக வழங்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என்பதே உண்மை.
பி.காம். படித்தவர்களில் பெரும்பாலானோருக்கும் இன்னும் ஜி.எஸ்.டி. குறித்த புரிதல் இல்லாததால், பி.காம் பட்டப் படிப்பின்போது, ஜி.எஸ்.டி. குறித்த துணை பாடங்கள் கூட மாணவர்களுக்கு கற்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.