நாடு முழுவதும் அமலானது ஜி.எஸ்.டி!

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மணியடித்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் முதல் ரத்தன் டாடா வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து…

By: Updated: July 1, 2017, 12:53:12 AM

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மணியடித்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் முதல் ரத்தன் டாடா வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னர் 1997-ஆம் ஆண்டு நள்ளிரவு நாடாளுமன்றம் கூடியது. அப்போது சுதந்திரதின பொன்விழா கொண்டாட்டங்களுக்காக அது கூட்டப்பட்டது.

பிரதமர் மோடி உரை:

இன்று நள்ளிரவு நடைபெற்ற ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசிய போது, “நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில் முடிவு செய்கிறோம். இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம். தேசிய வளர்ச்சிக்கான திட்டம். பல ஆண்டுகள் கழித்து, இந்த மைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி நடந்து வருகிறது. பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. பார்லிமென்ட்டில் ஜி.எஸ்.டி குறித்து பேசியிருக்கிறார்கள்.

கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு அறிமுகமாகியுள்ளது இந்த ஜி.எஸ்.டி. முதலில் மாநிலங்களுக்க நிறைய சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது. சர்தால் படேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதுபோலத் தான் பல வரிகள் ஒன்றுசேர்ந்து ஜி.எஸ்.டி ஆக உருவாகி உள்ளது. ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு நனவானது” என்று மோடி கூறினார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை:

இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசிய போது, “ஜிஎஸ்டி-ன் 14 ஆண்டுகால பயணம், கொல்கத்தாவில் தான் தொடங்கியது. முதன் முதலில் 2006-07 நிதியாண்டில் ஜிஎஸ்டி மசோதா முன்மொழியப்பட்டது. அதிகாரக்குழு 2007-ல் முதல் விவாத அறிக்கையை சமர்ப்பித்தது. ஜிஎஸ்டி அறிமுகம் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நான் இதனை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சராக இருந்த போது பணியாற்றி இருக்கிறேன்.

இதனால் ஜிஎஸ்டி உருவாக்கத்தில் நெருக்கமாக இருந்துள்ளேன். ஜிஎஸ்டி என்பது எப்படியும் அமலாகி விடும் என்பதை நான் அறிவேன். ஜிஎஸ்டி என்பது மத்திய மாநில அரசுகளின் கூட்டமைப்பாகும், இதில் எந்த ஒருவரும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது.

குறித்த நேரத்தில் வேலையை முடித்து ஜிஎஸ்டி கவுன்சில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நிறைய வரிகளை உள்ளடக்கி எளிமையான வரி முறை ஜிஎஸ்டியில் அடங்குகிறது. நம் ஏற்றுமதிகளை இன்னும் போட்டி ரீதியாக ஆக்குவதற்கு இந்த ஜிஎஸ்டி உதவும். இது நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் வலுவான ஊக்குவிப்பாகும்” என்றார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரை:

நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசிய போது, “ஒரே இந்தியா ஒரே வரி என்ற நடைமுறைக்கு தேசம் மாறுகிறது. ஜிஎஸ்டி மூலம் இந்தியா வரலாற்றை உருவாக்குகிறது, இது ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் முக்கிய சாதனை. உலகம் ஒரு மந்தமான வளர்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இந்திய அரசியலில் இது உச்சநிலையாகும்.

நள்ளிரவில் நாட்டின் மிகப்பெரிய சீர்த்திருத்தம் அமலாகவிருக்கிறது. இந்தப் பயணம் 2006-ல் தொடங்கியது. 2010-ல் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது. பிரணாப் முகர்ஜி இன்று அதன் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்.

ஜிஎஸ்டி உருவாக்கத்தில் அனைத்து மாநிலங்களும் பங்களிப்புச் செய்துள்ளன. ஜிஎஸ்டியினால் நலிந்த பிரிவினருக்கு சுமை ஏற்படாது. 2003-ல் வாட் வரி என்ற ஒற்றை வரி முறை தொடங்கியது. சிறப்புக்குரிய வரித்திட்டம் நடைமுறைக்கு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஜி.எஸ்.டி.யால் விலை உயரும் பொருட்கள்:

கோழி இறைச்சி, சமையல் எண்ணெய், கிராம்பு, ரீஃபைன்டு ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட சமையல் இடுபொருட்கள், மஞ்சள், ஜீரகம், தனியா, கருப்பு மிளகு, எண்ணெய் வித்துக்கள், கியாஸ் ஸ்டவ், கியாஸ் பர்னர், கொசுவிரட்டி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்.

ஜி.எஸ்.டி.யால் விலை குறையும் பொருட்கள்:

டிவி, ஏர் கண்டிஷனர்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், சமையல் சாதனங்கள், மின்விசிறி, வாஷிங் மெஷின், இன்வர்ட்டர், வாசனை திரவியங்கள், சோப்பு, ஷாம்பு, ஹேர் ஆயில், ஷேவிங் கிரீம், முகப்பவுடர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Gst launched by pm modi and pranabh mukerjee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X