ஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட 178 பொருட்களை கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் பட்டியல் இட்டிருக்கிறது. வருகிற 15-ம் தேதி முதல் இது அமுலுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதில் ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை 1 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். மக்கள் அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களின் பரிந்துரையை ஏற்று 178-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 58 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. விளைபொருட்கள் சேமிப்பு கட்டமைப்புக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் விவரம்:
1. ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2. டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது,
3. ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து
4.ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு
5. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு.
6. விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.
7.செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.
8. சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.
9.திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது. 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு.
10. 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாற்றப்பட்ட பொருட்களில் டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் அடங்கும்.
இதுபற்றி நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
28 சதவீத வரி பட்டியலில் இருக்கும் பல்வேறு பொருட்களின் எண்ணிக்கையையும், வரி விகிதத்தை 18 சதவீதமாக குறைக்க கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி 178 பொருட் கள் 18 சதவீத வரி வளையத்துக்குள் செல்கின்றன. எஞ்சிய 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி பட்டியலில் உள்ளன.
வரி குறைப்பு செய்யப்பட்ட முக்கிய பொருட்களில் குக்கர்கள், ஸ்டவ்கள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடிகள் காபி, விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள், சுவிங்கம், சாக்லெட்டுகள், பற்பசை, ஷாம்பு, முகச்சவரத்துக்கு பின் பயன்படுத்தும் திரவங்கள், குளியல் சோப்பு, சலவைத்தூள், சலவை சோப்பு, பெண்களுக்கான அழகு சாதன மூலப்பொருட்கள், ஷேவிங் சோப் மற்றும் கிரீம்கள், சத்து பானங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தை, சூட்கேஸ், காகிதம், எழுதுபொருட்கள், கைக்கெடிகாரங்கள், இசைக்கருவிகள், கிரானைட், மார்பிள், குளியல் அறை பீங்கான் பொருட்கள், தோல் ஆடைகள், செயற்கை முடி, டோப்பா, வாகன மற்றும் விமான உதிரிபாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த வரி குறைப்பு வருகிற 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதேநேரம் புகையிலை பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷனர், வாகுவம் கிளனர் பெயிண்ட் மற்றும் சிமெண்ட், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீதான வரி தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கும். 13 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வரும் 6 பொருட்கள் பூஜ்ய வரி நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான வரி 18 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களின் உணவகங்களில் வரி 18 சதவீதமாக இருக்கும். இதற்கும் குறைவான அந்தஸ்து கொண்ட ஏசி வசதி கொண்ட மற்றும் ஏசி வசதி இல்லாத உணவகங்களில் இது ஒரே சீராக இருக்கும் விதத்தில் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அறை வாடகை ரூ.7,500க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த 5 சதவீத வரி பொருந்தும்.
இந்த வரிகுறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வரி கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சுமையை எளிதாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வர்த்தகர்களுக்கு மிகவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.