மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 22-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சுமார் 27 பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டது.
சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்ய ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் திருத்தம் செய்ய தயார் என இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
1. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வணிகம் செய்யும் வணிகர்கள், மாதந்தோறும் ஜி.எஸ்.டி. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம்.
2. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு இ-வாலட் சேவை வழங்கப்படும்.
3. இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கான உச்சவரம்பு ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது.
4. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஏ.சி. ரெஸ்டாரண்டுகளுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்திலிருந்து குறைக்க ஆலோசனை செய்யப்படும்.
5. கைத்தறி நூலுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
6. வணிக சின்னமற்ற ஆயுர்வேத மருந்துகளுக்கான வரிவிகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
7. வணிக சின்னமற்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கான வரிவிகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
8. டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள் மற்றும் டீசல் பம்புகளுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
9. ரூ.50,000-த்துக்கும் அதிகமான விலையில் நகைகள் வாங்கும்போது பான் கார்டு தேவை என்ற நடைமுறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10. ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் நவம்பர் 9,10-ஆம் தேதிகளில் கவுஹாத்தியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.