தமிழக எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டது போன்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவையில், பாஜக-வுக்கு 116 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 57 உறுப்பினர்களும் உள்ளனர். குஜராத் பர்வரித்தன் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு ஒரு உறுப்பினர் மற்றும் சுயேச்சை ஒருவர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கர் சிங் வகேலா, சமீபத்தில் தனது பதவியை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்களான காங்கிரஸ் கொறடா பல்வந்த்சிங் ராஜ்புத், எம்எல்ஏ-க்கள் தேஜஸ்ஸ்ரீபன் படேல், பிரகலாத் படேல் ஆகியோரும் காங்கிரசில் இருந்து விலகினர். அவர்கள் அனைவரும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மேலும் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் நேற்று முன் தினம் விலகினர். அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ-க்கள் ஆறு பேர் விலகியதால், அக்கட்சியின் பலம் 51 ஆக குறைந்துள்ளது.
அதேசமயம், குஜராத் மாநில, மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதில், பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்) உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிடவுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு 47 எம்எல்ஏ-க்களின் வாக்குகள் தேவை. தற்போதைய நிலவரப்படி, பாஜக-வால் இரண்டு பேரையும், காங்கிரசால் ஒருவரையும் தேர்வு செய்ய முடியும். ஆனால், பாஜக மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாவதாக நிறுத்தப்பட்டுள்ள பல்வந்த்சிங் ராஜ்புத்-க்கு சில உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்த புகாருக்கு நாளை மாலைக்குள் விளக்கமளிக்க அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மேலும் சில எம்எல்ஏ-க்கள் பதவி விலகவுள்ளதாக காங்கிரஸ் கட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு விலகினால், அகமது படேலின் வெற்றி வாய்ப்பு குறையும். இதனால், பீதியடைந்த காங்கிரஸ் கட்சி, இரவோடு இரவாக தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் 44 பேரை பெங்களூருவுக்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் தமிழக எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்ட பாணியில், பெங்களூருவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஈகிள்டன் என்ற தனியார் சொகுசு விடுதியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்எல்ஏ-க்கள் 7 பேர் பெங்களூருவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.