Advertisment

குஜராத் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: செல்வாக்கு செலுத்தும் பால் கூட்டுறவு சங்கங்கள்… வளைக்கும் பா.ஜ.க

குஜராத் பால் கூட்டுறவு சங்கங்கள், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் பாதி இடங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Narendra Modi, Banas Dairy, Banaskantha, Gujarat milk co-operatives, Gujarat Co-operative Milk Marketing Federation, Gujarat Assembly elections, latest election news, election news Indian Express

குஜராத் பால் கூட்டுறவு சங்கங்கள், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் பாதி இடங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

குஜராத்தில் பணம் கொழிக்கும் பால் கூட்டுறவு சங்கங்கள், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 இடங்களில் கிட்டத்தட்ட 50 சதவிகித இடங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடும். முன்னதாக காங்கிரஸுடன் தொடர்புடைய நிர்வாகிகளால் நடத்தப்பட்ட இந்த கூட்டுறவு சங்கங்கள் இப்போது ஆளும் பா.ஜ.க-வுடன் இணைந்த தலைவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பால் தினமும் வழங்கப்படும் மொத்தம் 280 லட்சம் லிட்டர் பாலில் குஜராத்தின் மிகப்பெரிய பால் கூட்டுறவு சங்கமான பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பானஸ் பால் பண்ணை மற்றும் நான்கு முக்கிய பால் கூட்டுறவு சங்கங்களான மெஹ்சானா, ஆனந்த், சபர்கந்தா மற்றும் பஞ்ச்மஹால் மாவட்டங்களில் இருந்து 75 சதவீதம் பால் பங்களிப்பு செய்கின்றன.

இந்த ஆண்டு அக்டோபரில், குஜராத் மாநிலத்தின் பால் கூட்டுறவு சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, குஜராத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் அமுல் பிராண்ட் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இதற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். சோதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், குஜராத்திற்கு வெளியே விற்கப்படும் பாலுக்கு ஏற்கனவே மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதன் விலையை அமுலுக்கு இணையாக கொண்டு வரவும், சரக்கு செலவுகளை ஈடுகட்டவும் இந்த விலை உயர்வு என்று கூறினார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பானது 18 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கிராமத்தில் பால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பால் பண்ணையாளர்களுக்கு பால் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் குஜராத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாக்காளர்களை பாதிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு பால் கொள்முதல் விலையை 18-20 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, பால் உற்பத்தி செய்யும் விவசாயி, குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்புக்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.37 சம்பாதிக்கிறார், அதே சமயம் அவரது வருமானம் ஒரு லிட்டர் எருமைப்பாலுக்கு ரூ.50-55 ஆக உள்ளது.

குஜராத்தின் பால் கூட்டுறவு சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை முறியடித்து, இரண்டாம் கட்டத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, பால் பண்ணையாளர்கள் மத்தியில் அதன் கணிசமான ஆதரவைக் கேட்கிறது. புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தின் கூட்டுறவுத் துறையில் இல்லை.

“ஆனந்தைத் தலைமையிடமாகக் கொண்ட கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் கூட்டாக நடத்தப்படுகிறது. அதன் தலைவர் ராம்சிங் பார்மர் தற்போது பா.ஜ.க-விலும், துணைத் தலைவர் ராஜேந்திரசிங் பார்மர் காங்கிரஸிலும் உள்ளனர். மீதமுள்ள 17 சங்கங்கள் பா.ஜ.க வசம் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சங்கங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய தலைவர்களால் கட்டுப்படுத்தப்பட்டன,” என்று குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2017-ல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலாவுடன் கட்சியில் இருந்து விலகிய காங்கிரஸ் தலைவர்களில் ராம்சிங் பார்மரும் ஒருவர். பின்னர், அவர் பாஜகவில் சேர்ந்தார். இந்தத் தேர்தலில் கெடா மாவட்டத்தில் உள்ள தஸ்ராவில் போட்டியிட அவருடைய மகன் யோகேந்திர பார்மாருக்கு சீட் கொடுத்தார். அடுத்துள்ள ஆனந்த் தொகுதியில், ராஜேந்திரசிங் பார்மர், போர்சாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். “கூட்டுறவு அமைப்பில், வாரிய உறுப்பினர்களாகிய நாங்கள் (காங்கிரஸ் மற்றும் பாஜக) விவசாயிகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஆனால், சட்டசபை தேர்தல் என்பது வேறு ஒரு ஒரு களம். ஆனந்த் மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி” என்று ராஜேந்திரசிங் கூறினார்.

7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஆனந்த், 6 தொகுதிகளைக் கொண்ட கெடாவைத் தவிர, பானஸ்கந்தா (9 இடங்கள்), படன் (4 இடங்கள்), மெஹ்சானா (7 இடங்கள்), சபர்கந்தா (4 இடங்கள்), ஆரவல்லி (3 இடங்கள்), மற்றும் பஞ்சமஹால் (5 இடங்கள்) ) பால் கூட்டுறவுகளின் செல்வாக்கு பெற்ற தொகுதிகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன. இந்த மாவட்டங்கள் அனைத்துக்கும் டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள அகமதாபாத், வதோதரா மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை. ஏனெனில், இந்த மாவட்டங்கள் பெரும்பாலும் நகர்ப்புற மாவட்டங்கள். இருப்பினும், இதிலும் பல சட்டமன்ற தொகுதிகள் கிராமப்புறங்களில் வருகின்றன.

பால் கூட்டுறவு சங்கங்களின் அரசியல் செல்வாக்கை யூகிக்க இந்த ஆண்டு ஜூன் மாதம் பலன்பூர் மற்றும் மெஹ்சானாவில் புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க, பானஸ் பால் பண்ணை மற்றும் துத்சாகர் பால் பண்ணை ஆகிய இரண்டையும் மத்திய அரசு அனுமதித்தது.

பானஸ் பால் பண்ணை தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் அமைச்சருமான ஷங்கர் சவுத்ரி, பானஸ்கந்தாவில் உள்ள தாராத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். பானஸ் பால் பண்ணையின் ஆண்டு வருமானம் ரூ. 15,200 கோடி மற்றும் ஜூன் 2022-ல் வடக்கு குஜராத்தில் உள்ள பால் விவசாயிகளுக்கு ரூ.1,650 கோடி லாபத்தை அளித்துள்ளது.

மெஹ்சானா, பட்டான் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் உள்ள 1200 கிராம அளவிலான பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து 5 லட்சம் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் மெஹ்சானாவில் உள்ள தூத்சாகர் பால் பண்ணை இந்த ஆண்டு அதன் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. முன்னர், வகேலா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த இந்த பால் பண்ணை தலைவராக இருந்த விபுல் சௌத்ரி ரூ.800 கோடி ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பால்பண்ணையின் தற்போதைய தலைவர் அசோக் சவுத்ரி இப்போது நாட்டின் முதல் மத்திய கூட்டுறவு அமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இப்பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

“60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.321 கோடியை அளித்துள்ளோம். இது வாக்குப்பதிவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 முதல் 7 ரூபாய் வரை உயர்த்தியுள்ளோம். தற்போது விவசாயிகளுக்கு லிட்டருக்கு 45 முதல் 50 ரூபாய் வரை வழங்கி வருகிறோம்” என்று அசோக் சவுத்ரி கூறினார்.

தற்போது பா.ஜ.க-வில் உள்ள விபுல் சவுத்ரியின் ஆதரவாளர்கள் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முடியுமா என்று கேட்டபோது, அசோக் சவுத்ரி கூறுகையில்,“அவரால் உருவாக்கப்பட்ட அற்புத சேனாவில் பா.ஜ.க, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர். சமூக நலனுக்காக ஒன்று கூடினர். ஆனால், அரசியல் வந்ததும் சமூகம் பிளவுபட்டது. மக்கள் நல்ல ஊதியத்துக்கு மட்டுமே கவலைப்படுகிறார்கள்.” என்று கூறினார்.

விபுல் சவுத்ரி செல்வாக்கு மிக்க அஞ்சனா சவுத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர். தேர்தலுக்கு முன் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், வடக்கு குஜராத்தைச் சேர்ந்த இந்த சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் காந்திநகரில் உள்ள மான்சாவில் விபுலுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும், அவர்கள் தேர்தலில் தங்கள் அரசியல் விருப்பத்தைக் கூறத் தவிர்த்தனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிலையில், பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் விவசாய உற்பத்தி சந்தைக் குழு மற்றும் பண்ணைக் கூட்டுறவு உள்ளிட்ட பண்ணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும். கால்நடைகளின் உடல்நலம் மற்றும் தடுப்பூசிகளை கண்காணிக்க மானிய விலையில் கால்நடை தீவனம் மற்றும் பசு ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்துவதாக பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது. மாடு வாங்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கால்நடைக்கும் ஒரு நாளைக்கு ரூ.40 பராமரிப்புத் தொகையாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Congress Aam Aadmi Party Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment