Advertisment

குஜராத் ராஜ்யசபா தேர்தல் : அகமது படேல், அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி

காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்தத் தேர்தலில் கடும் நெருக்கடி கொடுத்ததை வெற்றியாக பா.ஜ.க. நினைக்கலாம். ஆனால் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு அனுதாபத்தை இது உருவாக்குகிறது

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
குஜராத் ராஜ்யசபா தேர்தல் : அகமது படேல், அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி

நீண்ட இழுபறிக்கு பிறகு குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. வேட்பாளர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரும் ஜெயித்தனர்.

Advertisment

குஜராத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய 3 எம்.பி.க்களுக்கான தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. மொத்தம் 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு 120 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், பா.ஜ.க. இரு இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் சுலபமாக கைப்பற்ற முடியும்.

பா.ஜ.க. உறுதியாக வெற்றிபெறத்தக்க இடங்களுக்கு தேசிய தலைவர் அமித்ஷாவையும், மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் வேட்பாளர்களாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சி அதன் தலைவி சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேலை 5-வது முறையாக ராஜ்யசபாவுக்கு அனுப்பும் திட்டத்துடன் களம் இறக்கியது.

publive-image அமித்ஷா

இதில்தான் வந்தது பிரச்னை! அகமது படேலை வீழ்த்தினால், காங்கிரஸ் தலைமைக்கு நேரடி ஷாக் கொடுத்ததாக இருக்கும் என கணக்குப் போட்ட பா.ஜ.க. அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. பா.ஜ.க. தனது 3-வது வேட்பாளராக காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து ஜூலை கடைசி வாரத்தில் அடுத்தடுத்து 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து விலகினர். இவர்களில் மூவர் பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

எஞ்சிய 51 எம்.எல்.ஏ.க்களும்கூட காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லாமல் இருந்தது. எனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அந்தக் கட்சி ஆளும் கர்நாடகாவுக்கு கடத்தி வந்து பாதுகாத்தனர். ஆனால் அதிலும்கூட 44 எம்.எல்.ஏ.க்களே வந்து சேர்ந்தனர். அகமது படேல் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்கிற சூழலில் ஆகஸ்ட் 8-ம் தேதி காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவின்போது பெரிய பிரச்னைகள் இல்லை.

மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் காங்கிரஸ் ஒரு பிரச்னையை எழுப்பியது. ‘காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான போலாபாய் கோகல், ராகவிபாய் படேல் ஆகியோர் வாக்களித்தபோது தங்கள் ‘சின்சியாரிட்டி’யை நிரூபிக்கிற விதமாக அமித்ஷாவிடம் வாக்குச்சீட்டை காட்டிவிட்டு பெட்டியில் போட்டனர். இதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எனவே அந்த இரு வாக்குகளையும் செல்லாததாக அறிவிக்கவேண்டும்.’ என முறையிட்டனர்.

publive-image ஸ்மிருதி இரானி

காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஆனந்த்சர்மா ஆகியோர் ஏற்கனவே ஹரியானாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் இதேபோல ஓட்டுச் சீட்டை காண்பித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்ட முன்மாதிரியை சுட்டிக்காட்டினர். பா.ஜ.க. தரப்பில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கே வந்து, ‘வாக்குப் பதிவின்போது காங்கிரஸ் எந்த ஆட்சேபணையும் எழுப்பவில்லை. எனவே அந்த வாக்குகள் செல்லும்’ என வாதிட்டனர்.

இந்த பஞ்சாயத்து காரணமாக, ஆகஸ்ட் 8 (நேற்று) மாலை 5 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை தள்ளிக்கொண்டே போனது. இரு தரப்பினரும் அடுத்தடுத்து தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். ஒருவழியாக ஆகஸ்ட் 9 (இன்று) அதிகாலை 1 மணியளவில் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அந்த இரு வாக்குகளையும் செல்லாத வாக்குகள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

1961-ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகள் 39 ஏ மற்றும் 39 ஏஏ விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை 1.50 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சத்யமேவ ஜெயதே என பதிவிட்டார். ‘பண பலம், அதிகார பலம் ஆகியவற்றை முறியடித்து இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும், துணைத்தலைவர் ராகுலுக்கும் கிடைத்த வெற்றி இது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்காக தொடக்கம் இது’ என கூறினார் அகமது படேல்.

காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரமும், ‘பண பலம், ஆள் பலம், அதிகார பலம் மூலமாக எப்போதும் ஜெயிக்க முடியாது’ என குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்தத் தேர்தலில் கடும் நெருக்கடி கொடுத்ததை வெற்றியாக பா.ஜ.க. நினைக்கலாம். ஆனால் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு அனுதாபத்தை இது உருவாக்குகிறது என்பதை மறுக்க முடியாது.

குஜராத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரே பார்லிமென்டேரியனாக இருக்கும் அகமது படேல் மீண்டும் அந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார். இதுநாள் வரை பின்னணியாக இருந்தே அரசியல் செய்த அகமது படேலை இந்தத் தேர்தல் நேரடி கள அரசியலுக்கு தள்ளும் என கணிக்கிறார்கள், குஜராத் அரசியல் பார்வையாளர்கள்.

Sonia Gandhi Ahmed Patel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment