மூத்த பத்திரிக்கையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் மற்றும் கடந்த 2015-ஆம் ஆண்டு கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலையின்போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, இருவரையும் கொலை செய்ய உபயோகப்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கிதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 5-ஆம் தேதி இரவு 8 மணியளவில், தன் வீட்டின் வெளியே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். மத்திய அரசையும், இந்துத்துவத்தையும் விமர்சித்து தன் லங்கேஷ் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ், வலதுசாரிய அமைப்புகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மூத்த பத்திரிக்கையாளர்கள், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேஷ் உடலை துளைத்த மூன்று தோட்டாக்களையும், வீட்டின் சுவற்றை துளைத்த ஒரு தோட்டாவையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆக்ஸ்ட் 30-ஆம் தேதி கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியும், கவுரி லங்கேஷை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியும் ஒன்றாக இருக்கலாம் என சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகித்தனர். இதையடுத்து, கவுரி லங்கேஷ் மரணத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களையும், எம்.எம்.கல்புர்கி கொலையின்போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, ’பாலிஸ்டிக் சிக்னேச்சர்’ (Ballistic Signature) எனப்படும், பாய்ந்து செல்லும் தோட்டாக்கள் மீது துப்பாக்கி ஏற்படுத்தும் தனிப்பட்ட குறியீடுகளானது, இருவர் கொலைகளிலும் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களில் ஒன்றுபோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இருவர் கொலைகளிலும் ஒரே துப்பாக்கி தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என உறுதிபட சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், இருவரையும் கொலை செய்தவர்கள் ஒரே குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த தடயவியல் சோதனையின் முடிவுகளை கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி மஹராஷ்டிராவை சேர்ந்த பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே கொலையுடன் ஒப்பிடும்போது, மூவரையும் கொலை செய்ய ஒரே துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என நம்பப்படுகிறது.
கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி இருவரும் 6 மாத இடைவெளியில் கொலை செய்யப்பட்டதால், எம்.எம்.கல்புர்கி கொலையை விசாரணை செய்யும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், இருவர் கொலைகளிலும் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை சோதனை செய்தபோது அவற்றில் பல ஒற்றுமைகள் இருந்தது கண்டறியப்பட்டன.
இதேபோல், கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலையில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களிலும், அதன்பின்பு கொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே கொலையில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களிலும், ஒரே மாதிரியான ‘Ballistic Signature’ இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எம்.எம்.கல்புர்கி கொலையில் குற்றவாளிகளை இன்னும் கண்டறியாத சி.பி.சி.ஐ.டி போலீசார், கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொலைகளை விசாரித்து வரும் சி.பி.ஐ. போலீசாருடன் ஒன்றிணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே கொலைகளில் ’சனாதன் சன்ஸ்தா’ எனும் இந்துத்துவ அமைப்பினருக்கு தொடர்பிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 17, 2016-ஆம் ஆண்டு கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொலைகளை விசாரிக்கும் சி.பி.ஐ. போலீசாரும், எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, கர்நாடகா தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட மூவர் கொலைகளிலும் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் ‘Ballistic Signature’-ஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீசாரின், தடயவியல் இயக்குநரகத்தில் உறுதிப்படுத்த முடிவெடுத்தனர்.
இந்த சோதனையில், ’Ballistic Signature’ ஒன்றுபோல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், இரு நாடுகளுக்கிடையே இதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாததால், இச்சோதனை குறித்த அறிக்கையை ஸ்காட்லாந்து போலீசார் சமர்ப்பிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் ‘Ballistic Signature’-ஐ ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. அதிலும் மூவர் கொலைகளிலும் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களில் ’Ballistic Signature’ ஒன்றுபோல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு, ஜனவரி 20-ஆம் தேதி ஸ்காட்லாந்து தடயவியல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படாததை குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், அதற்கடுத்ததாக குஜராத் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கையை தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக பயன்படுத்த ஒத்துக்கொண்டது.
இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகிய பகுத்தறிவாளர்கள், ஒரே துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர், ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பினரிடம் விசாரிக்கும் அதேவேளையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.