பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ம் தேதி (இன்று) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு படை வீரர்கள் புடை சூழ குர்மீத் ராம் ரஹீம் வந்தார். தொடர்ந்து, இன்று பிற்பகலில் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Gurmeet-Ram-Rahim-Singh1.jpg)
அதில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரம் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஹரியானா, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, பஞ்ச்குலா, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சண்டிகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.
தீர்ப்பையொட்டி அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துணை ராணுவ படை வீரர்கள் மட்டும் சுமார் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் சம்வங்கள் அரங்கேறின. செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாகவும், 3 தொலைக்காட்சி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.