பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், சிறையில் சுவர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு கடந்த மாதம் 25-ம் தேதி வழங்கப்பட்டது. அதில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் ஏற்பட்டது அதில், சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28-ம் தேதியன்று தீர்ப்பின் விவரம் அறிவிக்கப்பட்டது. குர்மீத் ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டுள்ள, ரோஹ்தக் சோனாரியா சிறைக்கு சென்ற நீதிபதி, அதனை வழங்கினார். அதில், சாமியார் மீதான இரு பாலியல் பலாத்கார வழக்கில், வழக்கு ஒன்றுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் 20 ஆண்டுகளும், தலா ரூ.15 லட்சம் அபராதம் வீதம் இரு வழக்குகளுக்கும் சேர்த்து ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அதுதவிர, பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் சிங், அங்குள்ள சுவர்களுடன் பேசுவதாகவும், சிறையில் தோட்ட வேலை செய்யும் அவருக்கு ரூ.40 ஊதியமாக வழங்கப்படுகிறது எனவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், தனது ஆசிரமத்தில் பட்டுப் படுக்கையில் தூங்கிய சாமியார் 8*8 சிறையில் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை கேண்டீனில் இருந்து வரவழைக்கப்படும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அவர் அருந்துவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.