டெல்லி, குருகிராமில் 3-ம் வகுப்பு மாணவன் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொலையை செய்ததாக 11-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.
டெல்லி, குருகிராம் பகுதியில் ரையான் சர்வதேச பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த மாணவன் பிரத்யுமான் தாக்கூர். கடந்த செப்டம்பர் 8-ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளியின் கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான் பிரத்யுமான். அவனது உடல் அருகே ரத்தக் கறை படிந்த கத்தியும் கிடந்தது.
ஆரம்பகட்ட புலன் விசாரணைகளுக்கு பிறகு, அதே பள்ளியின் பேருந்தில் நடத்துனராக இருந்த அஷோக் கைது செய்யப்பட்டார். சிறுவன பிரத்யுமானை பாலியல் தொல்லைகளுக்கு அஷோக் உட்படுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் பிரத்யுமானின் பெற்றோர் இதை ஏற்கவில்லை. உண்மை குற்றவாளிகள் இதில் காப்பாற்றப்படுவதாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, மாணவன் பிரத்யுமானுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய ரையான் சர்வதேசப் பள்ளியின் டிரஸ்டிகள் 3 பேரை கைது செய்யத் தயாரானது. மும்பையில் வசிக்கும் அவர்கள் மூவரும், இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அவர்களுக்கு அவகாசம் வழங்கியது.
இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு அவர்களது முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு பதிலை விரைவில் கூறும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தச் சூழலில்தான் இன்று (8-ம் தேதி) இந்த வழக்கில் திடுக்கிடும் புதிய திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.
பிரத்யுமானை கொலை செய்ததாக அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை சிபிஐ கைது செய்தது. அவனிடம் நடத்திய விசாரணையில், ‘எனக்கு படிப்பு ஏறவில்லை. விரைவில் தேர்வு இருக்கிறது. பெற்றோர் -ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் பள்ளியில் ஏற்பாடு செய்தார்கள். இந்த நெருக்கடிகளில் இருந்து தப்பவேண்டும் என்றால், பள்ளியில் சென்சேஷனலாக ஏதாவது நடந்தால்தான் உண்டு என்கிற முடிவுக்கு வந்தேன்.
எனவே தேர்வையும், பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பையும் தள்ளி வைக்கவே பிரத்யுமானை கொலை செய்தேன்’ என சிபிஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான், அந்த 11-ம் வகுப்பு மாணவன். அவனிடம் சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அவனுக்கு 18 வயது நிறைவு பெறாததால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் அடைப்பார்கள் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,‘பிரத்யுமான் கொலை வழக்கு தொடர்பாக சிசி டிவி கேமராக் காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, கொலை நடந்த சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து அந்த 11-ம் வகுப்பு மாணவன் வெளியேறிய காட்சி பதிவாகியிருக்கிறது. அவன் கத்தியுடன் அன்று பள்ளிக்கு வந்ததும் சாட்சியங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கைதான பஸ் கண்டக்டர் அஷோக் நிரபராதியா? என்பதை ஆவணங்கள் அடிப்படையில் முடிவு செய்வோம்’ என்றார்.
டெல்லியில் முக்கியமான பள்ளி ஒன்றில் நடந்திருக்கும் இந்தக் கொலையும், அதில் 11-ம் வகுப்பு மாணவனே கைதாகியிருப்பதும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது.