இரு விதமான ரூ.500, ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இரு விதமான ரூ.500, ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அந்த நோட்டுகளின் பரிமாணம் மற்றும் வடிவமைப்பில் வேறுபாடு காணப்படுகிறது என முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இரு விதமான நோட்டுகளை எப்படி அச்சடிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இது குறித்து அரசும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இரு விதமான ரூ.500 நோட்டுகள் விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் விவாதிக்கும் பொருட்டு கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.-யுமான டெரிக் ஓ பிரையன் நோட்டீஸ் அளித்துள்ளார்.
முன்னதாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும், நோட்டுகளின் பதுக்கலைத் தடுக்கும் வகையில் நானோ சிப்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், அது வெறும் வதந்தியே என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அப்போது விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.