scorecardresearch

நடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருட்கள் வழக்கு தொடர்பாக நடிகை சார்மியின் ரத்தம், நகம், முடி ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருட்கள் வழக்கு தொடர்பாக நடிகை சார்மியின் ரத்தம், நகம், முடி ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என கலால் துறை சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட பலரும்போதைப்பொருட்களை பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தியது. மேலும், செவ்வாய் கிழமை கலை இயக்குநர் சின்னாவிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் கலால் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார்.

விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது தனக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கக்கோரி நடிகை சார்மி தாக்கல் செய்த மனு மீது ஐதராபாத் உயர்நீதிமன்றம் செவ்வாய் கிழமை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், பெண் அதிகாரிதான் நடிகை சார்மியை விசாரணை மேற்கொள்கின்றனர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சார்மியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி ராஜசேகர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார். மேலும், நடிகை சார்மியின் ரத்தம், நகம், முடி ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என கலால் துறை சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உயர்நீதிமன்ரம் உத்தரவிட்டது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Hc restrains sit from taking charmees samples