அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உ.பி. மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர், பீகாரில் உள்ள துமாரியாகாட் மற்றும் ஜவா ஆகிய இந்த மூன்று பகுதிகளிலும் இதுவரை வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அபாயக்கட்டத்தை தாண்டி உள்ள பல ஆறுகளில் மழைவெள்ளம் செல்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஓடும் காக்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 12 கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 6 பேரின் உடல்களை ராணுவத்தினர் மீட்டனர். அப்போது மீட்புப்பணியில் ஈடுபட்ட ஒரு ராணுவ வீரர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பீகாரில் பலத்த மழையால் ஏராளமான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 12 மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இதுவரை அங்கு 41 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவப்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் 22 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதுவரை அங்கு 99 பேர் இறந்து உள்ளனர். 22½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். மழை வெள்ளத்தால் வட கிழக்கு மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் ரயில்களை பாதுகாப்பாக அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால், நாளை (புதன்கிழமை) வரை ரயில் போக்குவரத்து இருக்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்வர்களிடம் தொலைபேசி மூலம் தகவல்கள் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, நிவாரண பணிகளில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார்.