மூத்த பத்திரிக்கையாளரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், “இது என்னுடைய இந்தியா இல்லை” என, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், இந்துத்துவம் மற்றும் வலதுசாரி அமைப்புகளை கடுமையாக எதிர்த்து வந்தவர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு 8 மணியளவில் அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுப் படுகொலை செய்தனர்.
அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் கடும் கண்டனங்களையும், அனுதாபங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் இசையமைத்து வெளியாகவிருக்கும், ‘ஒன் ஹார்ட்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக மும்பையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், இந்திய முற்போக்குடனும், கனிவுடனும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
”இந்த சம்பவம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இம்மாதிரியான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாது என நம்புகிறேன். அப்படி நடந்தால் இது என்னுடைய இந்தியா இல்லை.”, என ஏ.ஆர். ரகுமான் கூறினார்.
’ஒன் ஹார்ட்’ திரைப்படம் குறித்து பேசிய ஏ.ஆர். ரகுமான், “இது முழுக்க முழுக்க இசை நிகழ்ச்சி குறித்த திரைப்படம். மக்கள் சண்டை, காதல், காமெடி என எல்லா வகை திரைப்படங்களையும் பார்த்துவிட்டார்கள். அதனால், அவர்களுக்கு மாற்று திரைப்படத்தை வழங்க வேண்டும் என நினைத்தோம்.