Advertisment

முற்றிலும் இயற்கை விவசாயத்தை நோக்கி இமாச்சலம்: அரசின் முன்னோடி திட்டங்கள்

இமாச்சல பிரதேசத்தில் கூடுதலாக 2,000 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வேளாண் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
முற்றிலும் இயற்கை விவசாயத்தை நோக்கி இமாச்சலம்: அரசின் முன்னோடி திட்டங்கள்

இமாச்சல பிரதேசத்தில் கூடுதலாக 2,000 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அம்மாநில வேளாண் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 200 கிராமங்களை ’பயோ வில்லேஜ்’-ஆக மாற்றவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஏற்கனவே அம்மாநிலத்தில் 22,000 ஹெக்டேர் நிலம் இயற்கை விவசாய முறையில் மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 40,000 விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கூடுதலாக 2,000 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘பயோ வில்லேஜ்’-ஆக மாற்ற உள்ள 200 கிராமங்களிலும் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளே இனி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “மாநில அரசு இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடையே ஊக்குவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தகுந்த ஆதார விலையை அரசு அளித்து வருகிறது.”, என்றார். மேலும், இயற்கை விவசாயத்தை நல்ல முறையில் மேற்கொள்ளும் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 3 லட்சம், இரண்டாம் பரிசாக 2 லட்சம், மூன்றாம் பரிசாக 1 லட்சம் பரிசுத்தொகையை 2017-2018-ஆம் ஆண்டு முதல் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார்.

அம்மாநிலத்தில் இயற்கை விவசாயத்திற்காக 321 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில், 212 கோடி ரூபாய் ஏற்கனவே இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 80 கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள மண்புழு உரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மண்புழு உரத்தை தயாரிக்க ஆகும் செலவில் அம்மாநில அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகின்றது. 1.5 லட்சம் மண்புழு உரம் அலகுகள் இந்த மானியத்தின் மூலம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், மேற்கொண்டு 20,000 மண்புழு உர தயாரிப்பு அலகுகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக வடகிழக்கு மாநிலமான சிக்கிம் கடந்த 2016-ஆம் ஆண்டு முற்றிலும் இயற்கை வழி விவசாயத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த சாதனையை அடைய சிக்கிம் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதனுடைய வழியில் இமாச்சலப் பிரதேசமும் இணைந்துகொள்ள உள்ளது.

Himachal Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment