ஹைதராபாத் நகரின் நாம்பள்ளி பகுதியில் பிச்சையெடுக்கும் 21 வயது பெண் ஹுமேரா பேகம். இவரது நான்கு மாத ஆண் குழந்தை ஃபைசல் கான், கடந்த புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. விடியற்காலை 4.30 மணிக்கு கண் விழித்து பார்த்தபோது தனது குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ந்த ஹுமேரா, காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, முகமது முஷ்டக் மற்றும் முகமது யூசுப் ஆகிய இரு நபர்கள் குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரிக்கையில், முஷ்டக் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவரது நண்பர் யூசுப்.
இதுகுறித்து நாம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், "முகமது கவுஸ் என்பவர் முஷ்டக்கின் உறவினர். அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் குழந்தையை வளர்க்க விரும்புவதாகவும், அப்படி யாரேனும் இருந்தால் கூறுமாறும் முஷ்டக்கிடம் கவுஸ் தெரிவித்து இருக்கிறார். 'தனக்கு தெரிந்த நிறைய பேர் இது போன்று இருப்பதாக' கூறிய கவுஸ், விரைவில் அதுபோன்றதொரு குழந்தையை ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துவிட்டு சென்றிருக்கிறார்.
அதன்பின், ஹுமேராவின் குழந்தையை கடத்திக் கொண்டு விடியற்காலை 5.30 மணிக்கு கவுஸ் வீட்டிற்கு முஷ்டக் சென்றிருக்கிறார். ஆனால், அக்குழந்தையை வாங்க மறுத்த கவுஸ், குழந்தையின் பெற்றோருடைய அனுமதி பெற்ற பின்னரே, குழந்தையை பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால், குழந்தையுடன் அங்கிருந்து மீண்டும் கிளம்பிய முஷ்டக், அருகில் இருந்து நிலோபர் மருத்துவமனைக்குச் சென்று யாரிடமாவது குழந்தையை கொடுத்துவிடலாம் என தேடிக் கொண்டிருந்தார். அங்குவைத்து அவரை கையும், களவுமாக காவல்துறை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டது.
குழந்தையை குற்றவாளியிடம் இருந்து மீட்ட போது அழுதுக் கொண்டிருந்தது. ஆனால், அதன்பின் என்னைப் பார்த்தவுடன், பற்களே இல்லாத வாயில் இருந்து சிரிப்பை உதிர்த்தது. அதன் நிமிடத்தை என்னால் மறக்கவே முடியாது. தொடர்ந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது.
அந்தக் குழந்தையின் சிரிப்பும், தாயுடைய ஆனந்தக் கண்ணீரும் எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறோம்" என இன்ஸ்பெக்டர் சஞ்சய் உருக்கமாக தெரிவித்தார். குழந்தை அவரைப் பார்த்து சிரிக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.