புகைப்படம் எடுத்த மக்கள்: பலியான இளைஞர்

அந்த வழியாக சென்றவர்கள் அந்த இளைஞருக்கு மனிதாபிமானத்துடன் உதவ முன்வந்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பூனேவில் சாலை விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததால், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். உதவி செய்ய முன்வராததோடு துடிதுடித்துக் கொண்டிருந்த இளைஞரை அவ்வழியாக சென்றவர்கள் புகைப்படமும் எடுத்தனர்.

பூனேவை சேர்ந்த 25 வயது இளைஞர் சதீஷ் பிரபாகர் என்பவர், ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் தன் நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சதீஷ் பிரபாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சுமார் அரை மணிநேரம் கழித்தும் அவ்வழியாக சென்றவர்கள் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிக்கு முன்வரவில்லை. மேலும், அங்கிருந்தவர்கள் அவரை புகைப்படங்கள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு அதிகப்படியான ரத்தம் வீணானது.

இந்நிலையில், அவ்வழியாக வந்த பல் மருத்துவர் கீர்த்தி ராஜ் என்பவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தவரை மீட்டு அவரது இதயத்திற்கு புத்துயிர் கொடுக்க முயன்றார். அதன்பின், ஆட்டோவில் அடிபட்ட இளைஞரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, சதீஷ் பிரபாகரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அடிபட்டு அரை மணிநேரமாக காப்பாற்ற யாரும் முன்வராததால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் அந்த இளைஞருக்கு மனிதாபிமானத்துடன் உதவ முன்வந்து விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வேகமான, எந்திரமயமான வாழ்க்கையால் மனித உயிர்கள் இரையாக்கப்படுகின்றன என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சாட்சி.

×Close
×Close