தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் என கூறப்படுபவரான ஹனிப்ரீத் இன்சானை ஹரியானா காவல் துறையினர் செவ்வாய் கிழமை கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தின் சிராக்பூர் - பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் வைத்து மதியம் சுமார் 2 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் தன் பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட தினம் வன்முறை வெடித்த வழக்கில், ஹனிப்ரீத் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியாக அவரது வளர்ப்பு மகள் என கூறப்படுபவரான ஹனிப்ரீத் இன்சான் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஹனிப்ரீத் இன்சான் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத் செவ்வாய் கிழமை காரில் இருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், தன் தந்தை குர்மீத் ராம் ரஹீம் குற்றமற்றவர் எனவும், பலாத்கார வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹரியானா காவல் துறையினர் ஹனிப்ரீத் இன்சானை கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தின் சிராக்பூர் - பஞ்ச்குலா நெடுஞ்சாலையில், டொயோட்டா இனோவா காரில் பயணித்தபோது கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் இருந்த மற்றொரு பெண்ணிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். ஹனிப்ரீத் புதன் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.