மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஜார்க்கண்டில் ஒருவர் படுகொலை

”’பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்” என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சிக்காக மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த தடையையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள், ’பசு பாதுகாவலர்கள்’ என்ற கும்பலால் படுகொலை செய்யப்படுவதும், கடுமையாக தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மாட்டிறைச்சி குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு கூட மக்கள் தயங்குகின்ற அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நீண்ட மௌனத்தை கடைபிடித்து வந்த பிரதமர் மோடி, வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “’பசு பாதுகாப்பு’என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், அதனை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்”, எனவும் கூறியிருந்தார்.

ஆனால், அவர் அவ்வாறு பேசியதற்கு அன்றைய நாளிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் எனுமிடத்தில், வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக கூறி, அஸ்கர் அன்சாரி என்பவரை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அடித்துக் கொலை செய்தது. மேலும், அவரது வாகனத்தையும் அந்த கும்பல் தீயிட்டு கொளுத்தியது.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் ஜார்க்கண்டில் வீட்டின் முன் மாட்டின் சடலம் கிடந்ததால், ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு அவரது வீட்டின் ஒரு பகுதியை கும்பல் ஒன்று தீயிட்டு கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close