பெங்களூரு "இந்திரா" உணவகத்திற்கும் "அம்மா" உணவகத்திற்கும் என்ன வித்தியாசம்?

அம்மா உணவகத்தைப் போலவே பெங்களூருவில் இந்திரா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்துள்ளார்

தமிழ்நாட்டில் இயங்கும் ‘அம்மா’ உணவகத்தை போல, பெங்களூருவில் அரசால் நடத்தப்படும் இந்திரா கேன்டீணை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைத்துள்ளார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த உணவகத்திற்கு ‘இந்திரா கேண்டீன்’ என மாநில அரசு பெயர் வைத்து உள்ளது.

முன்னதாக, இந்த உணவகங்கள் ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி, பெங்களூரு ஜெயநகரில் கனகபாளையா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்திரா கேண்டீனை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து, 101 இடங்களில் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் திறந்து வைத்தனர். முதல் நாளான நேற்று உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ராகுல் காந்தி, “கர்நாடகாவில் ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்காக, சித்தராமையா தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய சத்துணவு கிடைக்காமல் குழந்தைகளும் முதியவர்களும் நோய்வாய்ப்படுகின்றனர். இந்நிலையில் ஏழைகளின் ஏக்கத்தை பூர்த்தி செய்வதற்காக இந்திரா கேன்டீன் தொடங்கப்பட்டுள்ளது.

இனி உணவின்றி தவிக்கும் மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்துணவு கிடைக்கும். பெங்களூருவில் வாழும் ஏழை எளியோர், வேலைதேடி வருவோர் என லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். பெங்களூரு நகரில் உணவு இல்லாமல் ஒருவர் கூட பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்ற நோக்கில் இந்த கேண்டீன் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா பேசும்போது, “பசியை உணர்ந்தவர்களால் மட்டுமே மற்றவர்களின் பசியை போக்க முடியும். காங்கிரஸார் பசியை உணர்ந்ததால் இந்திரா காந்தியின் பெயரில், மலிவு விலையில் ஏழைகளின் பசியை போக்குகிறோம்.

காலை சிற்றுண்டி இட்லி, புளியோதரை, உப்புமா உள்ளிட்ட உணவு வகைகள் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும். மதியம் மற்றும் இரவு உணவு ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படும். வாரத்தின் 7 நாட்களும் செயல்படும் இந்த உணவகத்தில் ஒரு நாளில் 500 பேர் சாப்பிடலாம். அனைத்து வகை உணவுகளும் தரமாகவும், தூய்மையானதாகவும் வழங்கப்படும்.

பிரதமர் மோடி ஏழை மக்கள் சரியாக உணவை சாப்பிடக் கூடாது என்பதற்காக பல திட்டங்களை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, விலைவாசி ஏற்றம், ரேஷன் பொருட்கள் நிறுத்தம் எல்லாம் மக்களின் சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுகின்றன. மனதில் இருந்து பேசுகிறேன் என கூறிக்கொண்டு, மக்களின் வாழ்வை அழித்து வருகிறார்.
அவர் மன்கி பாத் (மனதில் இருந்து பேசுகிறேன்) என நடிக்கிறார். ஆனால் நாங்கள் ”வாங்கி பாத் (கத்திரிக்காய் சோறு) போடுகிறோம்” என்றார்.

இந்த கேண்டீனில் காலை உணவாக இட்லி, புளி சாதம், பொங்கல், உப்புமா வழங்கப்படும். மதியம் உணவாக தயிர், பருப்பு குழம்பும், இரவு தக்காளி சாதம், புளிசாதம், புதினா சாதம் போன்றவை வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் செயல்படும் ‘அம்மா’ உணவகத்தில், சாம்பார் – பொங்கல் 5 ரூபாய்க்கும், இட்லி 1 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மதிய உணவாக லெமன் சாதமும், கறிவேப்பில்லை சாதமும் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவையும் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆனால், ‘இந்திரா’ உணவகத்தில் மதிய மற்றும் இரவு உணவு 10 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது.

முன்னதாக, ராகுல் காந்தி பேசுகையில்,“ஒருசில மாதங்களுக்குள் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பயன்பெற முடியும்” என வாய்த்தவறி தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close