கேரளாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், தனக்கு பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில், அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பெண் விநோத முறையில் பெண் தேடி வருகிறார்.
கேரளாவை சேர்ந்த ரஞ்சிஷ் மஞ்சேரி (வயது 34), கடந்த ஏழு ஆண்டுகளாக தன் திருமணத்திற்கு பெண் தேடி வருகின்றனர். மேட்ரிமோனியல் இணையத்தளங்கள், உறவினர்கள் மூலம் தேடியும், அவருக்குப் பெண் கிடைக்கவில்லை. இதனால், ஃபேஸ்புக் மூலம் தனக்கு பெண் தேடும் வேலையில் இறங்கியுள்ளார் ரஞ்சிஷ் மஞ்சேரி. #FacebookMatrimony என்ற பெயரில், தனது விவரங்களைக் குறிப்பிட்டு, தான் திருமணத்திற்கு பெண் தேடுவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அந்த பதிவில், “எனக்கு இன்னும் திருமணம் நிச்சயமாகவில்லை. தற்போது வரை நான் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யாராவது தெரிந்தால், என்னிடம் தயவுகூர்ந்து தெரிவியுங்கள். எனக்கு 34 வயதாகிறது. நான் அந்த பெண்ணை பார்த்து அவரை பிடிக்க வேண்டும். வேறு எந்த கோரிக்கைகளும் இல்லை. தொழில்: புகைப்பட கலைஞர். இந்து. சாதி தடையில்லை.” என ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், பல சமயங்களில் ஜாதகம் ஒத்துப்போகாததாலும், தன் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என தெரிந்து வசதியின்மை காரணமாக திருமணம் தடைபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், தன் பெற்றோர்களுடன் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து, Khaleej Times எனும் செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தனக்கு திருமணத்திற்கு பெண் வேண்டும் என ரஞ்சிஷ் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நாளிலிருந்து அவருக்கு தொடர் அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கட்டுரை வெளியாகும் நேரம் வரை 4,099 முறை அந்த பதிவு பகிரப்பட்டிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, பஹ்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் இவருக்கு வரன்கள் குவிவதாக அந்த செய்தி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.