12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாத ஏழை பெண்: ஐஐடி நிறுவனத்தில் படிக்க உதவிய அக்கம்பக்கத்து மக்கள்

படிப்பை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளான மாணவிக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள், அவர்களாகவே நிதி திரட்டி ஐஐடி நிறுவனத்தில் படிக்க வைக்க வழிசெய்துள்ளனர்.

By: November 4, 2017, 11:06:44 AM

கேரளாவில் பிழைப்பு நடத்திவந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, கேரள மக்கள் ரூ.11 லட்சம் திரட்டித்தந்த நெகிழ்ச்சி சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது.

ஒருவருக்கு மருத்துவம், கல்வி என அடிப்படை உரிமைகள் பணத்துக்காக மறுக்கப்படும்போது, மக்களே ஒன்றிணைந்து அவர்களுக்கு நிதியுதவி செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படித்தான், இப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. குடும்ப வறுமை காரணமாக 12-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளான மாணவிக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள், அவர்களாகவே நிதி திரட்டி ஐஐடி நிறுவனத்தில் படிக்க வைக்க வழிசெய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த காஜல் ஜா (17 வயது), 12-ஆம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காஜல், வறுமையான சூழ்நிலை காரணமாக 12-ஆம் வகுப்புடன் படிப்பை பாதியில் கைவிட நேர்ந்தது.

இதனால், விரக்தியடைந்த காஜலின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவையும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காஜல் வசிக்கும் இந்திராபுரம் பகுதி மக்கள், மாணவியின் படிப்புத்திறன் வீணாகக்கூடாது என்பதற்காக, அவர்களாகவே பணத்தை திரட்டியுள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நிதி திரட்டினர். இதன்மூலம், திரட்டப்பட்ட ரூ.20,000 மூலம், காஜலை ஐஐடி கல்வி நிறுவன நுழைவுத்தேர்வுக்காக, பயிற்சி மையம் ஒன்றில் அம்மக்கள் மாணவியை சேர்த்துவிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அக்குடும்பம் நிலையான வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, காஜலின் தந்தைக்கு அலுவலகம் ஒன்றில் மேற்பார்வையாளர் வேலைக்கும் அம்மக்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதோடு அம்மக்கள் நின்றுவிடவில்லை. காஜல் குடும்பத்தினருக்கு சொந்தமான அடமானத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டை மீட்டுத்தரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தான் பள்ளியில் படிக்கும்போது தாத்தா, பாட்டி, அப்பா, சகோதரர் என அனைவரது உடல்நிலையும் சரியில்லாமல் போய்விடும், அதனால் தங்கள் குடும்பம் மிகவும் வறுமையான நிலைமையில் உள்ளதாகவும், காஜல் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Humanity wins in up as neighbours come together to fund a girls dreams of iit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X