தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக சக்கர நாற்காலி பயனர்களுக்கென தனி லிஃப்ட் அமைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த சனிக்கிழமை சக்கர நாற்காலி பயனர்களுக்கென வெர்ட்டி லிஃப்ட் (verti lift) அமைக்கப்பட்டது. இதனால், சக்கர நாற்காலி பயனர்களின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படும். ஒவ்வொரு முறையும் தங்கள் உடைமைகளை பெறுவதற்கு, காவலர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
‘பயணிகளே முக்கியம்’ (Passenger is prime) என்ற திட்டத்தின் கீழ் அடையாள முன்னெடுப்பாகவே சக்கர நாற்காலி பயனர்களுக்கான லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிஃப்ட் தவிர்த்து, பல வகை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையிலான மாறுதல்களையும் விமான நிலையத்தில் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
ராஜீவ் காந்தி விமான நிலையத்தில், ஏற்கனவே சாய்வு தள பாதைகள், இண்டர்காம் வசதி, சக்கர நாற்காலி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
”சக்கர நாற்காலி பயனர்களுக்கென இந்தியாவிலேயே முதன்முறையாக லிஃப்ட் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”, என விமான நிலையத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.ஜி.கே. கிஷோர் கூறினார்.