”போதைப்பொருள் வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது”:காஜல்

"என்னைப் பொறுத்தவரையில் அவர்களின் தொழில்முறை கடமைகளை முடித்துவிட்டபின், அவர்களது இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரியாது."

தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, தனது மேலாளர் ரோன்னி கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட பலரும்போதைப்பொருட்களை பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தியது. மற்றவர்களிடம் இந்த வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் கலால் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், இவரது வீட்டிலிருந்து ‘மரிஜூவானா’ எனப்படும் போதைப்பொருளும் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல்காரர்களிடம் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

நடிகர் நவ்தீப்பிடம் திங்கள் கிழமை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர். அன்றைய நாளே ரோன்னி கைது செய்யப்பட்டிருப்பதால், நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மேலாளர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது என, நடிகை காஜல் அகர்வால் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் வெளியிட்ட கடிதத்தில் காஜல் அகர்வால் குறிப்பிட்டதாவது, “ரோன்னி கைது செய்யப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. நமது சமூகத்தின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் எதிலும் எனக்கு துளியும் ஆதரவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்க முடியும் என கூறியது, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, பழக்கவழக்கங்களை நான் கட்டுப்படுத்த முடியும் என அர்த்தமாகாது. என்னுடைய பெற்றோர் என் துறையை நிர்வகிக்கின்றனர். என் துறையை சார்ந்தவர்களிடம் நான் தொழில்முறை உறவையும், சுமூகமான உறவையும் கடைபிடித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்களின் தொழில்முறை கடமைகளை முடித்துவிட்டபின், அவர்களது இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரியாது.”, என பதிவிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close