பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், தனக்கு ஆண்மையில்லை என நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்துள்ள விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அதில், சாமியார் மீதான இரு பாலியல் பலாத்கார வழக்கில், வழக்கு ஒன்றுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் 20 ஆண்டுகளும், தலா ரூ.15 லட்சம் அபராதம் வீதம் இரு வழக்குகளுக்கும் சேர்த்து ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அதுதவிர, பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சாமியார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிபிஐ-யிடம் அளித்த வாக்குமூலம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பல பெண்களை சாமியார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அவர்கள் அனைவரும் எந்த புகாரும் அளிக்காமல், ஆசிரமத்தை விட்டுச் சென்று விட்டனர். ஆசிரமத்தின் குஃபா (gufa) எனுமிடத்தில் தான் பாலியல் சீண்டல்களை சாமியார் மேற்கொள்வார். அங்கு பெண்கள் மட்டுமே பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவர். பாதுகாப்புக்கு இருக்கும் பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை மாஃபி (மன்னிப்பு) வழங்குதல் என்று அழைப்பர். நான் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது, பாபாஜி உனக்கு மாஃபி வழங்கினாரா? இல்லையா? என சக பெண் சீடர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்போது அதற்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை. பின்னர், நானும் பாதிக்கப்பட்ட பிறகு தான் எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.
அதேபோல், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சாமியார் குர்மீத் தரப்பில், அவரை நியாயப்படுத்தும் வகையில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதில், குர்மீத் ராம் ரஹீம் ஆண்மையற்றவர் என்ற வாதமும் பிரதானமாக முன் வைக்கப்பட்டது. ஆனால், இதனை கருத்தில் கொள்ளாத நீதிபதி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளார்.
முன்னதாக, ஆசிரமத்தில் இருக்கும் ஆண் சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.