இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.
சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,"சிக்கன்ஸ் நெக்" அல்லது "சிலிகுரி காரிடார்" எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், சீன தூதரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனத் தூதரை ராகுல் சந்தித்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனால், இந்த சந்திப்பு நிகழவில்லை என காங்கிரஸ் கட்சி மேலிடம் முதலில் மறுத்தது. பின்னர், ஒப்புக் கொண்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாகூறியதாவது: சீன தூதர், பூடான் தூதர், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிடோரை ராகுல் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த விவகாரத்தை மத்திய அரசு சர்ச்சையாக முயற்சிக்கிறது. இதனை அரசியலாக வேண்டாம் என்றார்.
இந்நிலையில்,"சீன தூதர், பூடான் தூதர், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிடோரை நான் சந்தித்தேன். சிக்கலான நேரத்தில் இது எனது கடமை. ஆயிரக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில், இவர் மாதிரி என்னால் ஊஞ்சலில் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது" என பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் விமர்சித்துள்ளார்.