பாபா ராம்தேவை நான் அப்போது சந்தித்திருக்க கூடாது என மத்திய அமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வுக்கு, 6 ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜி, சமகால அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். அதிகபட்சமாக ஜனாதிபதி பதவி வரை உட்கார்ந்துவிட்டவர்! சமீப நாட்களாக அவர் மனம் திறந்து வெளிப்படுத்தும் கருத்துகள் விவாதங்களாக மாறி வருகின்றன.
மன்மோகன்சிங் தலைமையிலான யுபிஏ-2 ஆட்சியின் காலகட்டம் அது! சரியாக சொல்வதென்றால், 2011-ம் ஆண்டு ஜூன் மாதம்! அப்போது பிரணாப் முகர்ஜி, மத்திய நிதி அமைச்சர்! வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி, டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார் யோகா குரு, பாபா ராம்தேவ்!
அப்போதுதான் அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக டெல்லியில் நடத்திய உண்ணாவிரதம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மன்மோகன் அரசுக்கு எதிரான அலையை உருவாக்கியதில் அந்தப் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. எனவே பாபா ராம்தேவின் போராட்டத்தை தவிர்க்க, மன்மோகன் அரசு ரொம்ப பிரயத்தனப்பட்டது.
2011, ஜூன் 1-ம் தேதி உஜ்ஜயினியில் இருந்து தனி ஜெட் விமானத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்காக டெல்லிக்கு கிளம்பினார் ராம்தேவ். உடனே அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜியும், அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலும் டெல்லி விமான நிலையத்திற்கே ஓடினார்கள். விமான நிலையத்தில் ராம்தேவை சந்தித்து சமரச முயற்சியில் இறங்கினர்.
இவர்களின் சமரசப் பேச்சுவார்த்தையை ராம்தேவ் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி, ஜூன் 4-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். பிறகு பாதுகாப்புப் படையினர் கொடுத்த நெருக்கடியில் அவர் அங்கிருந்து ஹரித்துவாருக்கு ஓட்டமெடுத்தது தனிக்கதை! அப்போது மூத்த அமைச்சர்கள் இருவரும் விமான நிலையத்திற்கு சென்று ராம்தேவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
6 ஆண்டுகளுக்கு பிறகு, தனது அந்த நடவடிக்கையை ‘தவறான கணிப்பின்’ அடிப்படையில் எடுத்த ஒரு நடவடிக்கையாக பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டிருக்கிறார். அக்டோபர் 14-ம் தேதி டெல்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏற்பாட்டில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, ‘அப்போது அதை நான் செய்திருக்க கூடாது’ என்றும் வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு மேலும் அவர் பதிலளிக்கையில், ‘அந்த சந்திப்பில் அரசியல் காரணங்கள் இருந்தன. ஏற்கனவே அன்னா ஹசாரே போராட்டத்தால் அரசுக்கு பிரச்னைகள் இருந்தன. எனவே ராம்தேவ் போராட்டத்தை ஆரம்பகட்டத்தில் தவிர்க்க விரும்பினோம். ராம்தேவ் தரப்புடன் பேச, எனக்கு சில தொடர்புகள் இருந்தன. அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
அவர்களில் ஒருவர்தான், ‘ராம்தேவ் டெல்லிக்கு வரும் முன்பே அவரிடம் வேண்டுகோள் வைத்து பேசுங்கள். டெல்லியில் அவரது ஆதரவாளர்களையும் சந்தியுங்கள். இதை நீங்கள் செய்தால், ராம்தேவுடன் நான் பேசுகிறேன். அதன்பிறகு உங்கள் பேச்சை அவர் கேட்பார்’ என்றார்.
பாபா ராம்தேவுடன் என்னால் சரளமாக இந்தியில் உரையாட முடியாத சிரமத்தை நான் அந்த நண்பரிடம் கூறினேன். அவர், ‘மொழிப் பிரச்னை இருந்தால் உங்களுடன் இன்னொருவரை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதற்காகவே கபில் சிபலையும் அழைத்துச் சென்றேன். ஒரு தவறான கணிப்பின் அடிப்படையில் எடுத்த அந்த முயற்சி அது. அதை நான் செய்திருக்க கூடாது. நான் செய்த தவறை ஒப்புக்கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்’ என குறிப்பிட்டார் பிரணாப் முகர்ஜி.