விமானப் பணிப்பெண்ணாக தொடர்வேன்: ராம்நாத் கோவிந்த் மகள்

விமானப் பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் என புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி தெரிவித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் என புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ஆவார். இவரது மனைவி பெயர சவீதா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாம் மிக எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என குறிப்பிட்டார். மேலும், டாக்டர்.ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் வழியில் செல்வது பெருமையளிக்கும் விஷயம். வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவதே நமது பலம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி, அப்பணியிலேயே தாம் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பையும், பின்னர் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் உளவியல் படித்து பட்டமும் பெற்றவர் சுவாதி. இவர், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்தின் பதவியேற்பு விழாவிற்கு பின்னர் சுவாதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் பேசிய சுவாதி,”எனது தந்தை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடினமாக உழைப்பே காரணம். எனது தந்தை எப்போதும் குடும்பத்தினரிடம், அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அதனால்தான் எங்களது குடும்பத்தினர் அனைவருமே இன்று சொந்தக் காலில் நிற்கிறோம். நான் தொடர்ந்து விமான பணிப்பெண்ணாக பணிபுரியவே விரும்புகிறேன். எங்களுக்கென்று தனி அடையாளத்தை நாங்கள் கொண்டு இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது,”சுவாதி இதுவரை அவரது தந்தையின் பெயரை உபயோகித்தது கிடையாது. செல்வாக்குமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்ற முறையில் வித்தியாசமாக எப்போதுமே அவர் நடந்து கொண்டது கிடையாது. அலுவலக பதிவுகளில் கூட அவரது தந்தையின் பெயர் ஆர்.என்.கோவிந்த் என்று தான் உள்ளது” என்றார்.

அவர் பணியாற்றி வரும் போயிங் 777 மற்றும் 787 ரக விமானங்களின், மூத்த விமானிகளுக்கு கூட அவர் ராம்நாத் கோவிந்தின் மகள் என்பது இரு நாட்களுக்கு முன்னர் தான் தெரியுமாம். ராம்நாத் கோவிந்தின் நெருங்கிய உறவினர் சி.சேகரும் கூட ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான். ஏர் இந்தியா கேபின் குழு சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

அதேபோல், ராம்நாத் கோவிந்தும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் நல்லதொரு உறவையே பேணிவந்துள்ளார். ஏர் இந்தியா கேபின் குழு சங்கத்தின் இரண்டு பிரச்னைகளை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது ராம்நாத் கோவிந்த் தீர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close