சீனா, பாகிஸ்தான் எல்லையில் எப்போது போர் வந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளதென விமானப்படை தலைமைத் தளபதி பிஎஸ் தானோ அறிவித்துள்ளார்.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தன.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. என்றபோதிலும் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.
இதையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் முடிவில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தது. எனினும், சீனா தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறதா? என்பது பற்றி வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.
அதேநேரம் சீன வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சூன்யிங் கூறுகையில், “இந்திய ராணுவமும், அதன்படை கருவிகளும் அதன் எல்லைக்குள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. டோக்லாம் பகுதியில் நாங்கள்(சீனா) தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவோம்“ என்றார்.
இந்த நிலையில் இந்திய விமானப்படைத் தலைமை தளபதி பி எஸ் தானோ இன்று(வியாழன்) தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, " பாகிஸ்தான், சீனா எல்லையில் ஒரேநேரத்தில் போர் வந்தாலும் கூட, அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை முழு வீச்சுடன் தயாராக உள்ளது. ஆனால், மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்த சவால் வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் கடந்த மாதம் பேட்டியளித்த போது, "இரு தரப்பு போரையும் எதிர்கொள்ள, இந்தியா தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, சீனாவிற்கு எதிராக எந்நேரத்திலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.