Idukki landslide: ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நள்ளிரவு 10:45 மணி அளவில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 4 லயன்களில் இருந்த 30 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த பகுதியில் வசித்து வந்த 82 நபர்களில் 12 பேரை அருகில் இருந்த சக தோட்ட தொழிலாளர்கள் உயிருடன் மீட்டனர். மண்ணுள் புதைந்தவர்களில் 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
உயிருடன் மீட்கப்பட்ட 12 பேர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் பவுனு. மீட்பு நடவடிக்கையின் போது கால் உடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் பின்பு கொலஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூன்று வாரங்கள் கழித்து மூணாற்றில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் தேயிலை தோட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம் – எச்சரிக்கை செய்யும் காலநிலை மாற்றம்!
அனைத்தையும் இழந்த நிலையில், தங்க வீடும் இல்லாமல், உண்ண உணவும் இல்லாத நிலையில் நயமக்காடு தேயிலை தோட்டத்தில் இருக்கும் சக தொழிலாளர்கள் இவரை கவனித்து வருகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, விபத்தில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த, கணவர் உட்பட, 9 நபர்களை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நான்காம் தலைமுறையாக இங்கு தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்த பவுனு 2005ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சமீபத்தில் அவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருடைய கணவர் பெட்டிமுடியில் வாச்சராக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய பவுனு, ”இப்படி ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டு போறேன்னு சொல்லி, நடுரோட்டுல இறக்கிவிட்டதுக்கு பதிலா, அன்னக்கே விட்டுருந்தா, அவரோட சேர்ந்து போயிருப்பேன்னே. கம்பெனிக்காக வேல பாக்கனும்னு ஒரு நாள் கூட லீவே எடுக்காம வேலை பாத்துக்கிட்டு இருந்ததுக்கு எங்களுக்கு கெடச்சது இது மட்டும் தான்” என்று கூறியுள்ளார்.
இவர்களுடைய லய வீட்டில் இவர்களுடன் மேலும் ஒரு குடும்பம் தங்கியிருந்தது. அதில் பெற்றோர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய மகன் மற்றும் உயிர் பிழைத்துள்ளார். மீதம் இருக்கும் 11 நபர்கள் எங்கே சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது தெரியவில்லை.
இது குறித்து ”பெம்பிள்ளை ஒருமை” கோமதி அகஸ்டனிடம் கேட்ட போது, ”அனைத்தையும் இழந்து நிற்கும் அவரை தற்போது மீண்டும் தேயிலை தோட்ட குடியிருப்பிற்கு அனுப்பியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த விபத்து நடந்த இதே நாளில் தான் கொச்சி விமான நிலையத்திலும் விபத்து ஏற்பட்டது. அங்கே இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தது. ஆனால் இங்கு நிலையை பார்த்தீர்களா? இறந்தவர்களின் பெயர் பட்டியல் இதுவரை முழுமையாக யாருக்காவது கிடைக்க வந்துள்ளதா? இவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மீதம் இருக்கும் ஐவரின் உடல்களை தேடுவது நேர விரையம் என்று ஒரு வாரத்திற்கு முன்பே தேடும் பணியையும் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil