ஐ.ஐ.டியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 7-ம் தேதி விதித்த தடையை ஜூலை 10-ம் தேதி உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் இரண்டரை லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. நுழைவுத்தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகிய இரு மாணவர்கள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘அந்த தவறான கேள்வி புரியாத காரணத்தால் பல மாணவர்கள் அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கவில்லை. எனவே தேர்வு எழுதிய அனைவருக்கும் மேற்படி போனஸ் மதிப்பெண்களை வழங்கவேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.
ஜூலை 7-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, ‘இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பதாக’ உத்தரவிட்டது. மேலும் வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்திலையில் ஜூலை 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கை தள்ளிப் போவதால் உருவாகும் விளைவுகள் குறித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணைக்கு பிறகு மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஐ.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கியது. இதனால் தேர்வு எழுதிவிட்டு காத்திருந்த மாணவர்களுக்கு நிம்மதி!