108 ஆம்புலன்ஸ் சேவை வாழ்வு காப்பான் மட்டுமல்ல!! வாழ்க்கையை ஆரம்பிக்கவும் உதவுபவன்.!! இந்த இலவச ஆம்புலன்ஸில், இரு ஆண்டுகளில் மட்டும் பச்சிளம் குழந்தைகள் சுமார் 4,360 பேர் தங்களுடைய தாயின் கருவறையில் இருந்து துள்ளிக் குதித்து வெளிவந்துள்ளன.
அவசரகால மருத்துவ சேவைக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை அம்மாநில கிராமப்புற பெண்களுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளது. குறிப்பாக, பேறு காலத்தில் ஏற்படும் தாய், சிசு இறப்பு விகிதங்களை பெருமளவு குறைத்துள்ளது.
அதேசமயம், கடந்த 2015-16 ஆண்டு காலகட்டத்தில் குழந்தைகள் 1955 பேரும், 2016-17 ஆண்டு காலகட்டத்தில் குழந்தைகள் 2405 பேரும் 108 ஆம்புலன்ஸில் பிறந்துள்ளனர் என அம்மாநில சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புறங்களில் பெரும்பாலும் வீட்டிலேயே பிரசவம் பார்த்து விடுவர். அவ்வாறு வீட்டிலேயே பிரசவம் பார்க்க சுமார் ஆறு மணி நேரமாகும். அப்படியான நேரத்தில் ஏதேனும் கடினமாக அவர்கள் உணர்ந்தால், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பர் என்றார். மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாவட்ட மருத்துவமனை அல்லது தாலுகா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்தே தாய்மார்கள் பிரசவித்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய பிரசவ சமயங்களில் எந்த ஒரு தாய் அல்லது குழந்தையும் சிரமப்பட்டதில்லை எனவும் ஆம்புலன்ஸில் இருக்கும் செவிலியர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களை கையாளும் வகையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் எனவும் அந்த அதிகாரி பெருமிதம் தெரிவித்தார்.