குஜராத்தில் உள்ள ’கிர்’ காட்டின் அருகே ஆம்புலன்ஸில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுல ஒன்னும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லன்னு சொல்ல வர்றீங்களா? ஆனால், அது விஷயமில்லை. அந்த ஆம்புலன்ஸை சுற்றியிருந்த 12 சிங்கங்களுக்கு மத்தியில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குழந்தை பிறந்ததுதான் ஆச்சரியம்.
குஜராத்தை சேர்ந்த 32 வயது பெண் மங்குபென் மக்வானா. இவரை பிரசவத்திற்காக கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆம்புலன்சில் ஜாஃபராபாத் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தனர்.
சிங்கங்கள் அதிகம் வாழும் காடான ‘கிர்’ காட்டின் அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த பெண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டதால் வழியிலேயே ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டியிருந்தது.
அப்போது, அங்கு வந்த சுமார் 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சுற்றி நின்றுகொண்டன. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த அனைவரும் பயந்த சமயத்தில், ஓட்டுநர் உள்ளூர்காரர் என்பதால் சிங்கங்களை அங்கிருந்து துரத்த முயன்றார். ஆனால், அதற்கெல்லாம் மசியாத அந்த சிங்கங்கள் வாகனத்தின் முன்பே நின்றுகொண்டன.
இதனிடையே, ஆம்புலன்ஸில் இருந்த அவசர சிகிச்சை உதவியாளர், செல்ஃபோன் மூலம் மருத்துவர் அளித்த வழிகாட்டுதலின்படி, அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதனால், அப்பெண் எந்தவித பாதிப்பும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதன்பின், ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக இயக்க, சிங்கங்கள் வழிவிட்டதால் அனைவரும் எந்த ஆபத்துமின்றி உயிர் பிழைத்தனர்.