குஜராத் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியிலும், கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போட்டியிடுகின்றார்.
3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரச் உறுப்பினர்களை பாஜக தம் வசம் இழுப்பதாக குற்றம்சாட்டி,கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஊடகம் முன் தோன்றி, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், அவர்களை பிரிக்க முடியாது எனவும் கூறினர். இந்நிலையில், குஜராத் மாநில பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திங்கள் கிழமை பெங்களூருக்கு சென்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையைக் குலைக்கவே அவர்கள் வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன் கிழமை காலை 7 மணியளவில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சட்டமன்ர உறுப்பினர்கள் அனைவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருக்கும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
"ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்றுவதற்காக, பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளது”, என காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அகமது படேல், வருமான வரித்துறையினர் சோதனைக்குப் பின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.