சுதந்திர தின நேரடி அப்டேட்ஸ்: "மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது" - பிரதமர் மோடி உரை

இந்திய திருநாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தற்போது அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரது உரையில், “நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால், இந்த நாடே மனவேதனையில் உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி நாட்டு மக்களின் பங்களிப்பு அவசியம். இயற்கை பேரிடர்களால் நம் நாடு சில நேரங்களில் இன்னல்களை சந்திப்பது வேதனையளிக்கிறது.

ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் அதன் விளைவு சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள். பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. மனதில் நம்பிக்கையை விதைத்தால் நினைத்த செயலை செய்து முடிக்க முடியும். பொருள், பலம் என எல்லாம் இருந்தாலும், எண்ணம் இருந்தால் மட்டுமே செயலை நிறைவேற்ற முடியும்.  யாரையும் சார்ந்திருக்காத நாடாக நாம் விளங்குகிறோம். நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு.

சுதந்திரத்திற்கு பிறகும் மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு தற்போது மின்வசதி செய்யப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளுக்கு அல்ல, இந்த நாடு நேர்மையான குடிமக்களுக்கு மட்டுமானது. அந்த நேர்மையைத் தான் இன்று கொண்டாடி வருகிறோம்.

ஜி.எஸ்.டி. வரி நடைமுறை நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர். ஜம்மூ காஷ்மீரை மீண்டும் சொர்க்க பூமியாக நாம் மாற்ற வேண்டும். வன்முறையாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் நாம் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். இதனால், நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளலாம். பயங்கரவாதிகள் மட்டும் பயங்கரவாதத்திற்கு கனிவு காட்டும் வாய்ப்பே இல்லை.

தொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அரசுத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. திட்டம் தாமதமானால் ஏழை மக்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத் தன்மை ஏற்படும். கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பான பலனைத் தந்துள்ளன. 125 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணத்தை, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து கண்டுபிடித்துள்ளோம்.

தற்போது அனைத்து முடிவுகளும், மாநில அரசைக் கலந்து ஆலோசித்தே எடுக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி. திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்கள் ஆகும். இதுவரை மத்திய அரசுகள் மாநில அரசை, அண்ணன், தம்பி என வேறுபடுத்தி பார்த்தன. ஒவ்வொரு புதிய திட்டங்களையும் குடிமக்கள் ஆதரிப்பதால், ஊழலை ஒழித்து வருகிறோம். ஹவாலா பணப் பரிவர்த்தனைக்கு உதவியாக இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துன்பங்கள் பலவரினும் விவசாயிகள் கடும் உழைப்பால் சாதனைகளை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப மாற்றத்தால் வேலை வாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும். முத்தலாக முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பெண்களுக்கு இந்தியா முழு ஆதரவு தரும். மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு முன்னேற்ற பாதையில் நடைபோடலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close