திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், கர்நாடகா போன்ற மிகவும் பாதிப்படைந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபப்ட்டவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53.97%) வெளிநாட்டு பயண வரலாற்றைக் கொண்டிருந்தவர்கள். குறிப்பாக, அவர்களில் மூன்றில் இரண்டு பேர் (67.22%) ஈரானைத் தவிர்த்த வளைகுடாவில் உள்ள ஒரு நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள்.
மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப் மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளிகளின் பயண வரலாற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வு செய்தது. இந்த மாநிலங்களில் பதிவான ஒட்டுமொத்த எண்ணிகையில், 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சர்வதேச பயண வரலாற்றைக் கொண்டவைகள். அதிலும் குறிப்பாக, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (54.94%) வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.
இதற்கு ஒரு சாத்தியமான காரணம் என்னவென்றால், ஜனவரி 17 அன்று சீனாவுக்கு பயணம் செய்வதை இந்திய மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற விமானப் பயண ஆலோசனை குறிப்புகள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் வளைகுடா நாடுகளுக்கு இந்தியா நீட்டித்தது.
பிப்ரவரி 3ம் தேதி சீன நாட்டினருக்கான இ-விசாக்களை நிறுத்தி வைக்கப்பட்டது .
பிப்ரவரி 26 வெளியிட்ட அறிக்கை: ஈரான், இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும், மதிப்பீட்டின் அடிப்படையில் பயணிகளைத் ஸ்க்ரீனிங் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது;
மார்ச் 3ம் தேதி வெளியிட்ட அறிக்கை: ஈரான், இத்தாலி, ஜப்பான், சீனா, தென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது ;
மார்ச் 10ம் தேதி வெளியிட்ட அறிக்கை: சீனா, இத்தாலி, தாய்லாந்து, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு (மார்ச் 10) பயண வரலாறு கொண்ட மக்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது;
மார்ச் 16ம் தேதி வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமான்,குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.
அதே நாளில், ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டன.
மார்ச் 22-ம் தேதி அனைத்து சர்வதேச விமானங்களும் இடைநிறுத்தம் செய்வதாக இந்திய அரசு அறிவித்தது.
இந்தியாவிலிருந்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள், வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு, எமிரேட்ஸ், கத்தார் நாட்டின் வழித்தடங்கள் மூலமாகத் தான் பயணிக்கின்றன.
ஈரானைத் தவிர, வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இல்லை என்ற காரணத்தினால் கூட விமானக் கட்டுபாட்டை இந்தியா தவிர்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மொத்தம் 570 பேர், சவுதி அரேபியாவில் 1299 பேர், கத்தார் நாட்டில் 634 பேர், பஹ்ரைனில் 515 பேரும், குவைத்தில் 266 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ரிசோர்ஸ் மையம் தெரிவித்துள்ளது.
சீனா, ஈரான், இத்தாலி, அமெரிக்காஆகிய நாடுகள் உலகளவில் வைரஸ் தொற்றின் மையமாக இருந்தனர்... இருந்து வருகின்றனர்.
எனவே, சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களுக்குச் செல்லும் இந்தியர்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சித்தது,அங்கிருந்து வரும் பயணிகளைத் திரையிடுவதில் அதிகமாக கவனம் செலுத்தியது.
இந்த வைரஸ் வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பி வரும் பயணிகள் மூலமாக இந்தியாவில் சத்தமில்லாமல் பதுங்கியதை இங்கு யாரும் உணரவில்லை. வளைகுடா பயணிகள் வைரஸை தங்கள் சொந்த மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பரப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
50 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை கொண்ட ஒரு மாநிலத்தின் மூத்த சுகாதார அதிகாரி கூறுகையில்: “ஆரம்ப காலகட்டத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்தியிருந்தால், சிறப்பாக இருந்திருப்போம். ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் அதிக கவனம் செலுத்தி வந்தோம். மத்திய கிழக்கு நாடுகளை நாம் கோட்டைவிட்டோம். தாமதமாகத்தான் அவசரத்தை புரிந்தோம்” என்றார்.
அதிக எண்ணிக்கை கொண்ட மகாராஷ்டிராவில், திங்கள்கிழமை வரை, மொத்தமுள்ள 203 வழக்குகளில், 36 பேர் வளைகுடாவில் இருந்து வந்த பயணிகள்.
கேரளாவில், வளைகுடாவின் பங்கு மிக அதிகம். அங்கு பயண வரலாற்றைக் கொண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் வளைகுடாவைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடாகாவில் மார்ச் 30 தரவுகளின் படி, பயண வரலாற்றைக் கொண்ட 49 நோயாளிகளில், 22 பேர் வளைகுடா நாடுகளோடு தொடர்புடையவர்கள். திங்கள்கிழமை வரை மாநிலத்தில் மொத்தம் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது .
குஜராத் மாநிலத்தில் வெளிநாடு பயண வரலாற்றைக் கொண்ட 32 வழக்குகளில்,பாதிக்கும் மேற்பட்டவை (18) வளைகுடாவிலிருந்து வந்தவை. குஜராத்தில், இதுவரையில் மொத்தம் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற மாநிலங்களில் வளைகுடா நாடுகளின் பங்கு அதிகமாக இல்லை. உதாரணமாக, தெலுங்கான மாநிலத்தில், பயண வரலாறு கொண்ட 35 நோயாளிகளில், 6 பேர்மட்டுமே வளைகுடா நாடுகளோடு தொடர்புடையவை. தெலுங்கானவின், மொத்தம் எண்ணிக்கை 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள். ஆனால், இதில் நான்கு பேர் மட்டுமே வளைகுடா நாடுகளோடு தொடர்புடையவை.
மொத்தம் 39 வழக்குகள் கொண்ட பஞ்சாபில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உள்ளது. மேற்கு வங்கத்தில் 19 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள்.
இந்த இரண்டு மாநிலங்களுக்கு வளைகுடா நாடுகளால் எந்த பாதிப்பும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.