உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீத பெண் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் ‘ஆக்ஷன் எய்ட் இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது.
‘ஆக்ஷன் எய்ட் இந்தியா’ அமைப்பு “இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழித்தல்: முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகள்” எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை சமீபத்தில் நடிகையும் சமூக ஆர்வலருமான ஷபனா ஆஸ்மி வெளியிட்டார்.
அதில், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் இன்றளவும் தடுக்க முடியாத வகையில், அதிகளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய ஆய்வு முடிவுகள்:
1. உலகளவில் நடைபெறும் பெண் குழந்தை திருமணங்களில் இந்தியாவில் தான் அதிகளவில் 33 சதவீத திருமணங்கள் நடைபெறுகின்றன. எனவே, பெண் குழந்தை திருமணத்தில் இந்தியாதான் முதல் இடத்தை வகிக்கிறது.
2. 103 மில்லியன் இந்தியர்கள் தங்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே திருமணங்கள் செய்துகொள்கின்றனர்.
3. 103 மில்லியன் பேரில் 85.3 மில்லியன் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. 103 மில்லியன் என்பது, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஃபிலிப்பைன்ஸ் (100 மில்லியன்) மற்றும் ஜெர்மனி (80.68 மில்லியன்) நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவை விட அதிகம்.
5. உலகளவில், ஒரு நிமிடத்திற்கு 28 பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதில், இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுகின்றன.
6. பெண் குழந்தை திருமணங்களை ஒழித்தால், 27,000 குழந்தை பேறு இறப்புகளையும், 55,000 ஒருவயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்புகளையும், 1,60,000 குழந்தை இறப்புகளையும் தடுக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
“ஆணாதிக்கம் தான் குழந்தை திருமணங்கள் நடைபெற காரணமாக உள்ளது. ஆணாதிக்கத்தை ஒழித்து, பெண் கல்வி மற்றும் பெண்களிடையே நம்பிக்கையை பரப்பினால் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய குழந்தை திருமணம் எனும் அவலத்திற்கு ஆளாகும்போது அந்த நாட்டை நாகரிகம் அடைந்த நாடு என சொல்ல முடியாது. இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு முடிவு காணவேண்டும்.”, என ஷபனா ஆஸ்மி தெரிவித்தார்.