விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு கட்டுப்படாத பயணிகளுக்கு, விமானத்தில் பறக்க தடை செய்யும் வகையிலான புதிய விதிகளை மத்திய அரசு பிறப்பித்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிவசேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட், டெல்லி விமான நிலையத்தில் தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவில்லை எனக்கூறி, ஏர் இந்திய நிறுவன ஊழியரை காலணியால் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், அவருக்கு விமானத்தில் பறக்க தடை விதித்தது. இதன்பின், அவர் மன்னிப்பு கோரியதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பயணிகளுக்கு விமானத்தில் பறக்க தடை விதிப்பதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் இத்தகைய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டதாவது:
மத்திய அரசு வெளியிட்ட விதிகளின் படி ஒருவருக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கும் முறைகளும், அதற்கான கால அளவும் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. உடல் ரீதியாக சைகை காட்டுதல், வார்த்தைகள் மூலமாக துன்புறுத்துதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படாதது உள்ளிட்டவற்றில் பயணி ஈடுபட்டால், 3 மாதங்கள் வரை விமானத்தில் பறக்க தடை.
2. உடல் ரீதியாக துன்புறுத்துதல், அதாவது ஒருவரை தள்ளுதல், உதைத்தல், அடித்தல், இழுத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால், 6 மாதங்கள் வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.
3. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்பாடுகளான, விமான செயல்பாட்டு சாதனங்களை சேதப்படுத்துதல், ஒருவரை உடல் ரீதியாக காயப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் வரை விமானத்தில் பறக்க தடை.
விமான ஊழியர்கல் அல்லது சக பயணிகள் என யாரை இத்தகைய துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தினாலும், அவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும்.
எந்த விமான நிறுவனத்தில் பயணிகள் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்நிறுவனத்தில் அனைத்து விமானங்களில் அப்பயணி பயணிக்க முடியாது.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம் தனிநபர்களுக்கு தடை விதித்தால் அவர்களும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.