இலங்கை ராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியா தனது படைகளை அனுப்பவுள்ளதாக பரவும் செய்திகளுக்கு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. .
முன்னதாக, மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு தப்பியோடி வந்தட்டதாக சமூக வலைதளங்களிலும், சில இலங்கை ஊடகங்களிலும் செய்திகள் பரவியது. இது போலியானது, அப்பட்டமான பொய் என இலங்கையின் இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மகிந்த ராஜபக்ச அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார். அப்போது முதலே, அவர் எங்கிருக்கிறார் என்பது போன்ற ஊகங்கள் சமூக வலைதளத்தில் பரவுகிறது.
ராஜபக்சே விவகாரத்தில் முதல்முறையாக நேற்று கருத்து தெரிவித்த இந்தியா, இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவை அளிப்போம் என தெரிவித்திருந்தது.
The High Commission would like to categorically deny speculative reports in sections of media and social media about #India sending her troops to Sri Lanka. These reports and such views are also not in keeping with the position of
— India in Sri Lanka (@IndiainSL) May 11, 2022
the Government of #India. (1/2)
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இத்தகைய தகவல்கள் இந்தியாவின் நிலைப்பாடு கிடையாது. இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்று நேற்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தனர்.
ஜனநாயக முறைப்படி இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருந்தார்.
மகிந்த ராஜப்கச ஆதரவாளர்கள், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு மோதலில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜபக்ச ராஜினாமா செய்தார். பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், ராணுவமும் குவிக்கப்பட்டது.
இருப்பினும், போராட்டக்காரர்கள் அதிபரும் பதவி விலக வேண்டும் என போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ராஜபக்ச வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த பல அரசியல்வாதிகளின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சக குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு இலங்கை சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார்.ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் இலங்கை மக்கள் வீதிகளில் போராடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil